போலியோ சொட்டு மருந்து முகாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமை கலெக்டர் லலிதா மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமை கலெக்டர் லலிதா மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்.
போலியோ சொட்டு மருந்து
குழந்தைகளுக்கு இளம்பிள்ளைவாதம் ஏற்படாமல் பாதுகாக்கும் நோக்கத்தில் நாடு முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. அதற்கான முகாம் நேற்று நாடு முழுவதும் நடந்தது.
அதன்படி மயிலாடுதுறை நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் லலிதா கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் 582 இடங்களில் 76 ஆயிரத்து 5 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட உள்ளது. விடுபட்ட குழந்தைகளுக்கு நாளை (இன்று), நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்றார்.
முகாமில் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பிரதாப்குமார் மற்றும் சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்கள் கலந்துகொண்டு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியிலும் போலியோ சொட்டு மருந்து முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார். அப்போது சுகாதாரத்துறை மாவட்ட இணை இயக்குனர் சிவகுமார், அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் ராஜசேகரன் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், ஆஸ்பத்திரி பணியாளர்கள் உடனிருந்தனர்.
சீர்காழி
சீர்காழி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நேற்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது. முகாமிற்கு அரசு தலைமை டாக்டர் பானுமதி தலைமை தாங்கினார். சீர்காழி ரோட்டரி சங்க தலைவர் ராஜேந்திரன், குழந்தைகள் நல டாக்டர் மருதவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போலியோ சொட்டு மருந்து முகாமை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து ஒரு குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், முகாமில் விடுபட்டவர்களுக்கு நாளை (இன்று) மற்றும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) இல்லம் தேடி செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றார்.
இதேபோல் மருத்துவத்துறை சார்பில் 2 நடமாடும் வாகனம் மூலம் சீர்காழி நகர் பகுதி, தென்பாதி வைத்தீஸ்வரன் கோவில் பகுதிகளில் சாலையோரம் வாழும் 35 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை நேரில் சென்று வழங்கினர். நிகழ்ச்சியில் டாக்டர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள், சுகாதாரத்துறை அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பொறையாறு
பொறையாறில் நிவேதா மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது. முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கார்த்திக்சந்திரகுமார் தலைமை தாங்கினார். நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கி முகாமை தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் டாக்டர் சிவரஞ்சனி, சுகாதார ஆய்வாளர் சீனிவாசபெருமாள், செம்பனார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினிஸ்ரீதர், பள்ளி முதல்வர் சுகுணசங்கரி, தி. மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மூவலூர்
மயிலாடுதுறை அருகே மூவலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. முகாமிற்கு ஒன்றியக்குழு தலைவி காமாட்சிமூர்த்தி தலைமை தாங்கி, குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் முகாமை தொடங்கி வைத்தார். இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாஸ்கரன், டாக்டர்கள், செவிலியர்கள் மருத்துவ பணியாளர்கள் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துகள் வழங்கினர்.