முதியவருக்கு அரிவாள் வெட்டு
தேவகோட்டை அருகே முதியவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
காரைக்குடி,
காளையார்கோவில் அருகே உள்ள சீவல்கண்மாயை சேர்ந்த சிங்காரவேல் (வயது60) என்பவர் ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர் தேவகோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட குன்னக்கரையில் கிடை போட்டு ஆடுகளை மேய்து வருகிறார். ஆடுகளைப் பாதுகாக்க 4 நாய்களை வளர்த்து வருகிறார்.கிடை போட்டுள்ள இடத்தின் அருகில் பாலகிருஷ்ணன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் சுரேஷ் (வயது36) வீட்டை விட்டு வெளியே வரும்போது கிடையிலிருந்த நாய் சுரேஷை பார்த்து குரைத்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் நாயை கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த சிங்காரவேலு சுரேஷை தாக்கியதாக கூறப்படுகிறது.சிங்காரவேலு வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் கிடைக்கு திரும்பிய சிங்காரவேலை சுரேஷ் அரிவாளால் தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சிங்காரவேலு சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.