2½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

கடலூர் மாவட்டத்தில் 2½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

Update: 2022-02-27 17:15 GMT

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று நடந்தது. இதற்காக அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், தனியார் ஆஸ்பத்திரிகள், பள்ளிக்கூடங்கள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 1611 முகாம்கள் அமைக்கப் பட்டு இருந்தன.

5 வயதுக்குட்பட்ட 2 லட்சத்து 45 ஆயிரத்து 681 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து போலியோ சொட்டு மருந்து முகாம் தொடக்க நிகழ்ச்சி வடலூர் அருட்பிரகாச வள்ளலார் சபை அருகே நடந்தது.

அமைச்சர் தொடங்கி வைத்தார்

நிகழ்ச்சிக்கு  அமைச்சர்  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி, முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் கூறுகையில்,

 பெற்றோர்கள் தங்களின் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை முகாம்களுக்கு அழைத்துச்சென்று போலியோ சொட்டு மருந்து கொடுத்து போலியோ நோய் பாதித்த குழந்தைகள் இல்லாத மாவட்டமாக கடலூரை உருவாக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து அனைத்து மையங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. மாலை நிலவரப்படி 2 லட்சத்து 39 ஆயிரத்து 270 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப் பட்டது. 
இந்த பணியில் 6 ஆயிரத்து 444 பணியாளர்களும், 196 மேற்பார்வையாளர்களும், மாவட்ட அளவில் 7 சிறப்பு குழுவினரும் ஈடுபட்டனர். இப்பணிகளில் சுகாதாரத்துறையுடன் இணைந்து பல்வேறு துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சத்து 45 ஆயிரத்து 681 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதில் நேற்று 2 லட்சத்து 39 ஆயிரத்து 270 குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

முகாம் தொடக்க நிகழ்ச்சியில்  கூடுதல் கலெக்டர் (வருவாய்) ரஞ்ஜீத்சிங், இணை இயக்குனர் (நலப்பணிகள்) ரமேஷ்பாபு, துணை இயக்குனர் மீரா, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன், மாவட்ட நூலக அலுவலர் பாலசரஸ்வதி, தாசில்தார் சுரேஷ்குமார், வடலூர் நகராட்சி செயல் அலுவலர் குணாளன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்