வார விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும் பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்
வார விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் குளித்தும் காவிரி ஆற்றில் பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.
பென்னாகரம்:
வார விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் குளித்தும், காவிரி ஆற்றில் பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள்
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வார்கள்.இந்த நிலையில் கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் நேற்று வார விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினி பால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் பல்வேறு இடங்களில் குளித்தனர். குறிப்பாக மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அலைமோதினர். இதனால் அங்கு கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பின்னர் அவர்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.
போக்குவரத்து நெரிசல்
தொடர்ந்து அவர்கள் தொங்கு பாலம், முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா, உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கடைகள், உணவகங்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போலீசார் ஆலம்பாடி, மணல்திட்டு, மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர்.
சுற்றுலா வாகனங்கள் நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இல்லாததால் கார், வேன், இருசக்கர வாகனங்களை சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே நிறுத்தினர். இதனால் ஒகேனக்கல்லில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே வாகனங்களை நிறுத்த இடவசதி செய்து தர வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.