ஆன்லைன் ரம்மியில் ரூ.3 லட்சம் இழப்பு: பட்டதாரி வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

விளாத்திகுளம் அருகே ஆன்லைனில் ரம்மி விளையாட்டில் ரூ 3 லட்சம் இழந்த பட்டதாரி வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

Update: 2022-02-27 15:50 GMT
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே ஆன்லைனில் ரம்மி விளையாட்டில் ரூ.3 லட்சம் இழந்த பட்டதாரி வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பட்டதாரி வாலிபர்
விளாத்திகுளம் அருகே உள்ள வேப்பலோடை கிராமத்தினை சேர்ந்தவர் மாடசாமி. இவர் சென்டிரிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கீதா.  இந்த தம்பதிக்கு விக்னேஷ், பிரகாஷ் (22) என்ற 2 மகன்கள். இதில் விக்னேஷ் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பிரகாஷ் தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி கணிதம் முடித்து விட்டு வேலை தேடி வந்துள்ளார். இதற்கிடையில் தனது தந்தையுடன் சென்டிரிங் வேலைக்கும் சென்றுள்ளர். 
ஆன்லைன் ரம்மி
மேலும் அவ்வப்போது தனது தந்தை, தாய், சகோதாரன் ஆகியோரிடம் இண்டர்வியூக்கு செல்ல வேண்டும், கோச்சிங் கிளாஸ் செல்ல வேண்டும் என்று பணம் வாங்கியுள்ளார். சென்டிரிங் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தினையும் வீட்டிற்கு தரமால் இருந்துள்ளார். மேலும் எப்போதும் அவர் செல்போன் கையுமாக இருந்துள்ளார். இது தவிர வீட்டில் இருந்த பணத்தினையும் யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்துள்ளார். இந்த பணத்தை எல்லாம் அவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
தூக்கு போட்டு தற்கொலை
 இந்த சூழ்நிலையில் கடந்த 25-ந்தேதி தனக்கு அவசரமாக ரூ.10 ஆயிரம் பணம் வேண்டும் என்று தாய் கீதாவிடம் பிரகாஷ் கேட்டுள்ளார். அப்போது எதற்கெடுத்தாலும், பணம், பணம் ஏன் கேட்கிறாய். இதுவரை வாங்கிய பணத்தினை என்ன செய்தாய்? இனி உனக்கு பணம் கிடையாது. ஒழுங்காக வேலைக்கு போ என்று கீதா திட்டியதாக கூறப்படுகிறது.
 இதனால் மனமுடைந்து காணப்பட்ட பிராகஷ், வீட்டிற்குள் சென்று அங்கிருந்த சேலையால் பனங்கட்டையில் போட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார். தூக்கிட்டு உயிருக்காக போராடி கொண்டு இருப்பதை பார்த்த அவரது பெற்றோர், அருகில் உள்ளவர்கள் உதவியுடன் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலன் இல்லமால் உயிரிழந்துவிட்டார். இதையெடுத்து தருவைக்குளம் போலீசார் பிரகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 
காரணம் என்ன?
மேலும் இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த சில ஆண்டுகளாக பிரகாஷ் ஆன்லைனில் ரம்மி விளையாடி, அதற்கு அடிமையாக இருந்தது தெரியவந்துள்ளது. சுமார் ரூ.3 லட்ச வரை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்த நிலையில், தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற அன்றும் ஆன்லைன் ரம்மி விளையாட தாயிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் மறுத்து திட்டி விடவே, தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்துள்ளது.  

மேலும் செய்திகள்