போலீஸ்காரர் குடும்பத்திற்கு ரூ20 லட்சம் நிதி உதவி
பணியின்போது விபத்தில் இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு ரூ20 லட்சம் நிதி உதவியை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் வழங்கினார்.
குடியாத்தம்
பணியின்போது விபத்தில் இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி உதவியை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் வழங்கினார்.
பணியின்போது மரணம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுண்ணாம்பு பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 36). குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு லாவண்யா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதி பொங்கல் அன்று சைனகுண்டா சோதனைச்சாவடியில் பணி முடித்துவிட்டு வீடு திரும்பும்பியபோது கொட்டமிட்டா கிராமம் அருகே மினி லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பாலாஜி பரிதாபமாக இறந்தார்.
தமிழக காவல்துறையில் 2010-ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் சார்பில் காக்கும் கரங்கள் என்ற அமைப்பை உருவாக்கி பணியின்போது இறந்த சக காவலர்களுக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.
அதன்படி பணியின்போது இறந்த பாலாஜிக்கு நிதி வழங்க முடிவு செய்து ரூ.15 லட்சத்து 85 ஆயிரத்து 715 மற்றும் வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் ரூ.4 லட்சத்து 25 ஆயிரம் என மொத்தம் ரூ.20 லட்சத்து 10 ஆயிரத்து 715 வழங்கும் நிகழ்ச்சி குடியாத்தத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
ரூ.20 லட்சம்
நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி, கணபதி, ராஜன்பாபு, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், கிருஷ்ணமூர்த்தி, குமரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி வரவேற்றார்.
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கலந்துகொண்டு, விபத்தில் பலியான பாலாஜியின் இரண்டு பிள்ளைகளுக்கும் தலா ரூ.7 லட்சம், அவரது மனைவி லாவண்யா பெயரில் ரூ.5 லட்சத்துக்கான டெபாசிட் செய்யப்பட்ட பத்திரங்கள் வழங்கினார்.
தொடர்ந்து லாவண்யாவிடம் ஒரு லட்ச ரூபாய் ரொக்கமும், அவரது பெற்றோர்களிடம் 50 ஆயிரமும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் வேலூர் மாவட்டத்தில் காவல்துறை சார்பில் ஆயிரத்து 917 பேர் சம்பளம் பெறுகின்றனர் இவர்களுக்கு வங்கியில் சிறப்பு திட்டங்கள் உள்ளன.
அதன்படி குறிப்பிட்ட வங்கிகளில் பேக்கேஜ் சேலரி திட்டத்தின்கீழ் சேரும் காவலர்களுக்கு ரூ.30 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை பணியின்போது இறந்தால் அவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.
தற்போதுவரை 1,800 காவலர்கள் இந்த பேக்கேஜ் சேலரி திட்டத்தின்கீழ் வங்கிகளில் இணைக்கப்பட்டுள்ளனர்.
மீதமுள்ளவர்கள் விரைவில் இணைக்கப்படுவார்கள். தற்போது பணியின்போது இறந்த பாலாஜியின் குடும்பத்திற்கு விரைவில் ரூ.30 லட்சம் வழங்கப்பட உள்ளது என்றார்.