கூட்டுறவு வங்கி பணியாளர்கள் 7-ந் தேதி முதல் வேலைநிறுத்தம் நெல்லை மண்டல ஆயத்த கூட்டத்தில் தீர்மானம்
கூட்டுறவு வங்கி பணியாளர்கள் 7-ந் தேதி முதல் வேலைநிறுத்தம்
நெல்லை:
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மூலம் தொடர் வேலை நிறுத்த போராட்டத்துக்கான மண்டல ஆயத்த கூட்டம் நெல்லை சந்திப்பில் நேற்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். டாக்பியா அமைப்பின் மாநில துணைத்தலைவர் நடராஜன், ஓய்வு பெற்றோர் சங்க மாநில பொதுச் செயலாளர் முத்துப்பாண்டியன் ஆகியோர் பேசினார்கள்.
இந்த கூட்டத்தில், ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம், பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் அரசாணை படி வழங்க வேண்டும். 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி பட்டியல் கூட்டுறவு துறையால் இறுதி செய்து வெளியிட்டு தள்ளுபடி தொகை உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். ரேஷன் கடை பணியாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படி உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 7-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது. அதையொட்டி சங்கம் மற்றும் ரேஷன் கடை சாவிகளை மண்டல இணைப்பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் நடராஜ கண்ணன், முருகேசன், வீரிய பெருமாள், போராட்ட குழு தலைவர் பரமசிவன், செயலாளர் சந்திரலால் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் மாரியப்பன் நன்றி கூறினார்.