சேலத்தில் கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி நண்பர்களுடன் மீன்பிடிக்க சென்றபோது பரிதாபம்

சேலத்தில் நண்பர்களுடன் மீன் பிடிக்க சென்ற பள்ளி மாணவன் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

Update: 2022-02-26 21:31 GMT
சேலம்,
சிறுவன்
சேலம் பெரமனூர் நாகம்மாள் தோட்டம் மார்க்கபந்து வீதியை சேர்ந்தவர் செல்வராஜ், தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மகன் யாதித் (வயது 9). சேலத்தில் உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். இவன், நேற்று மாலை தனது நண்பர்களுடன் அழகாபுரத்தை அடுத்துள்ள பாறைகாடு பகுதிக்கு சென்றான். அங்குள்ள துரைசாமி என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் சிறுவன் யாதித் மற்றும் அவனது நண்பர்கள் இறங்கி மீன் பிடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது யாதித் மட்டும் எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்துவிட்டான். பின்னர் சிறுவன் தண்ணீரில் தத்தளித்தபடி மூழ்கியதை  பார்த்த, உடன் வந்த நண்பர்கள் அங்கிருந்து ஓடி அக்கம் பக்கத்தில் வசிக்கும் பொதுமக்களிடம் தெரிவித்தனர்.
உடல் மீட்பு
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் அழகாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் தீயணைப்பு படைவீரர்களும் அங்கு வந்து கிணற்றில் இறங்கி சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நேரம் கழித்து சிறுவன் யாதித் இறந்த நிலையில் அவனது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு மேலே கொண்டு வந்தனர். இதையடுத்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் மீன் பிடிக்க சென்றபோது பள்ளி மாணவன் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரமனூர் பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்