பள்ளிக்கு செல்ல பெற்றோர் வற்புறுத்தியதால் மனம் உடைந்த 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
ஆத்தூரில் பள்ளிக்கு செல்ல பெற்றோர் வற்புறுத்தியதால் மனம் உடைந்த 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆத்தூர்,
பள்ளி மாணவி
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகரசபை 9-வது வார்டு நேரு நகர் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம், எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி உமா. இவர்களுடைய இளைய மகள் சிந்துஜா (வயது 15). இவர், ஆத்தூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 2 நாட்களாக இவர் பள்ளிக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று காலை பள்ளிக்கு புறப்பட்டு செல்லுமாறு சிந்துஜாவின் பெற்றோர் அவரை வற்புறுத்தியதாக தெரிகிறது.
இதையடுத்து தனது அறைக்கு சென்ற அந்த மாணவி, உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு, மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே அறைக்குள் சென்ற மகள் நீண்டநேரமாக வராததால் சந்தேகம் அடைந்த ெபற்றோர் அறைக்கதவை திறக்க முயன்றனர்.
தூக்கில் பிணம்
அப்போது கதவு உள்பக்கமாக தாழ் போடப்பட்டு உள்ளதை அறிந்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று அவர்கள் பார்த்தனர். அங்கு மாணவி சிந்துஜா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து ஆத்தூர் போலீசுக்கு பெற்றோர் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
பள்ளிக்கு செல்ல பெற்றோர் வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆத்தூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.