கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து; 1½ வயது குழந்தை உள்பட 4 பேர் சிகிச்சை பலனின்றி சாவு

யாதகிரி அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் படுகாயமடைந்த 1½ வயது குழந்தை உள்பட 4 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2022-02-26 20:55 GMT
யாதகிரி:

கியாஸ் சிலிண்டர் வெடித்தது

  யாதகிரி மாவட்டம் சகாபுரா தாலுகா தூரனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சாகேப் கவுடா. இவரது மருமகளுக்கு நேற்று முன்தினம் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு உணவு சமைக்க, கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தப்பட்டது.

  அப்போது திடீரென்று கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் அங்கிருந்த பொருட்கள் மற்றும் வீடுகளுக்குள் தீ பரவியது. இதில் வீட்டில் இருந்த குழந்தைகள் உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து, தீக்காயம் அடைந்தவர்களை மீட்டு கலபுரகி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

4 பேர் சாவு

  அங்கு தீவிர கண்காணிப்பு பிரிவில் இருந்த ஆத்யா(வயது 3), மகாந்தேஷ்(வயது 1½), நிங்கம்மா(89) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 17 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் கங்கம்மா(51) என்பவர் நேற்று காலை உயிரிழந்தார். இதனால் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

  இவர்களது உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மற்றவர்களுக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்