பா.ஜனதாவின் வெறுப்பு அரசியல் எடுபடாது தொல்.திருமாவளவன் எம்.பி. பேச்சு

மதத்தின் அடிப்படையில் மக்களை பிரிக்கின்றனர் என்றும், பா.ஜனதாவின் வெறுப்பு அரசியல் எடுபடாது என்றும் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.

Update: 2022-02-26 20:07 GMT
திருக்காட்டுப்பள்ளி:-

மதத்தின் அடிப்படையில் மக்களை பிரிக்கின்றனர் என்றும், பா.ஜனதாவின் வெறுப்பு அரசியல் எடுபடாது என்றும் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார். 

மாணவி தற்கொலை

தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் மதச்சாயம் பூசுவதை கண்டித்து மைக்கேல்பட்டியில் நேற்று சமய சார்பின்மைக்கான ஜனநாயக கூட்டமைப்பு மற்றும் மைக்கேல்பட்டி பொதுமக்கள் சார்பில் சமயசார்பின்மை, சமூகநீதி பாதுகாப்பு ஒளியேற்றல் நிகழ்ச்சி நடந்தது. 
இந்த நிகழ்ச்சியில் கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி, திருவடிக்குடில் சுவாமிகள், மைக்கேல்பட்டி அஜிஸ், புனித அடைக்கல அன்னை சபை தலைவி மரியபிலோமி ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். 

எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மகேந்திரன், தஞ்சை மாவட்ட செயலாளர் பாரதி, எம்.எல்.ஏ.க்கள் சின்னதுரை, அப்துல் சமது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் வக்கீல் ஜீவக்குமார், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், திராவிடர் விடுதலைக்கழக தலைவர் கொளத்தூர்மணி, தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன், தமிழக மக்கள் கட்சி தலைவர் ஷெரீப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியில் திருமாவளவன் பேசியதாவது:- 

சமய சார்பின்மை

ஜனநாயகத்தை பாதுகாக்க சமயசார்பின்மையை பாதுகாக்க வேண்டும். மாணவி தற்கொலை விவகாரத்தை ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக திருப்புகிறார்கள். இதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. தமிழ்நாட்டில் நல்லாட்சி நிர்வாகத்தை முதல்-அமைச்சர் ஸ்டாலின் நடத்தி வருகிறார். இந்த அரசு சமயச்சார்பற்ற அரசாகவும், மதச்சார்பின்மைக்கு ஆதரவாகவும் நடந்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் பா.ஜனதா கட்சியின் வெறுப்பு அரசியல் எடுபடாது. தமிழக அரசும், காவல்துறையும் சமயசார்பின்மைக்கும், சிறுபான்மையினருக்கும் ஆதரவாக இருக்கிறது. மத அடிப்படையில் மக்களை பிரிக்க முயற்சிக்கின்றனர். மத உணர்வுகளை அரசியலுக்கு பயன்படுத்திக்கொள்வதை எதிர்க்கிறோம். தமிழ்நாட்டைப்போல் வேறு எங்கும் மத நல்லிணக்கம் இல்லை. மதநல்லிணக்க பூமியாக தமிழ்நாடு திகழ்கிறது. 
இவ்வாறு அவர் பேசினார். 
முடிவில் கும்பகோணம் மறைமாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்