‘டெமு’ ரெயிலை மதுரை வரை நீட்டிக்க வேண்டும் கோட்ட மேலாளரிடம் நேரில் வலியுறுத்தல்

காரைக்குடி-திருவாரூர் இடையே இயக்கப்படும் டெமு ரெயிலை மதுரை வரை நீட்டிக்க வேண்டும் என கோட்ட மேலாளரிடம் நேரில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2022-02-26 19:43 GMT
பட்டுக்கோட்டை:-

காரைக்குடி-திருவாரூர் இடையே இயக்கப்படும் டெமு ரெயிலை மதுரை வரை நீட்டிக்க வேண்டும் என கோட்ட மேலாளரிடம் நேரில் வலியுறுத்தப்பட்டது. 

ரெயில் நிலையத்தில் ஆய்வு

காரைக்குடி- திருவாரூர் ரெயில்வே வழித்தடத்தில் உள்ள பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் மணிஷ் அகர்வால் மற்றும் ரெயில்வேத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர். 
முன்னதாக ரெயில்வே அலுவலர்கள் சிறப்பு ஆய்வு ரெயில் மூலம் காரைக்குடியில் இருந்து புறப்பட்டு அறந்தாங்கி ரெயில் நிலையத்தில் ஆய்வுகளை முடித்து விட்டு பட்டுக்கோட்டை ரெயில் நிலையம் வந்தனர். பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் உள்ள சரக்கு முனையத்தை ஆய்வு செய்தனர்.

கோரிக்கை மனு

பட்டுக்கோட்டையில் இருந்து நெல் மற்றும் அரிசி ஏற்றுமதி செய்யும் வகையில், ரெயில்வே நிலையத்தில் இருந்து நாடியம்மன் கோவில் சாலை வரை சிமெண்டு தளம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்குமாறு ஆய்வின்போது கோட்ட மேலாளர் அறிவுறுத்தினார்.
பின்னர் ரெயில் நிலையத்தில் பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நலச்சங்க தலைவர் ஜெயராமன், செயலாளர் விவேகானந்தம் மற்றும் வர்த்தக சங்கத்தினர் கோட்ட மேலாளரிடம் நேரில் மனு அளித்தனர். அந்த மனுவில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு இருந்தன. 
கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- 

மதுரை வரை...

காரைக்குடியில் இருந்து சென்னைக்கு இரு முனைகளில் இருந்தும் இரவு நேர மற்றும் பகல் நேர விரைவு ரெயில்களை இயக்க வேண்டும். தற்சமயம் மயிலாடுதுறையில் இருந்து, இந்த தடத்தின் வழியாக காரைக்குடி சென்று திரும்பும் ‘டெமு’ ரெயிலை மதுரை வரை நீட்டிக்க வேண்டும்.
திருச்சியில் இருந்து தஞ்சை- மயிலாடுதுறை-விழுப்புரம் வழியாக சென்னைக்கு இருமுனைகளில் இருந்து, இயங்கி வரும் சோழன் அதிவிரைவு ரெயிலில், மயிலாடுதுறை சந்திப்பிற்கு சென்று பயணம் செய்யும் வகையில், காரைக்குடி - மயிலாடுதுறை இடையே புதிய ரெயில் சேவை தொடங்க வேண்டும்.
இயக்க திட்டமிடப்பட்டுள்ள எர்ணாகுளம் - வேளாங்கண்ணி விரைவு ரெயில் மற்றும் தாம்பரம் செங்கோட்டை விரைவு ரெயில் ஆகியவற்றை உடனடியாக இயக்க வேண்டும். பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் பார்சல் புக்கிங் அலுவலகத்தை திறக்க வேண்டும். 
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

வாய்ப்பு

கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர், தற்சமயம் இயங்கும் திருவாரூர்- காரைக்குடி ‘டெமு’ ரெயிலை மதுரை வரை நீட்டிக்கவும், சோழன் அதிவிரைவு ரெயிலில் சென்னைக்கு சென்று வர ஏதுவாக புதிய டெமு ரயில் காரைக்குடியில் இருந்து மயிலாடுதுறை வரை, விரைவில் இயக்க வாய்ப்பு உள்ளது என்றும், இத்தடத்தில் உள்ள ரெயில்வே கேட்டுகளுக்கு இரவு நேரப்பணிக்கு முழுமையாக முன்னாள் ராணுவத்தினர் நியமிக்கப்பட்ட உடன் விரைவு ரெயில்கள் இயக்கப்படும்’ எனவும் தெரிவித்தார்.
பின்னர் பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நலச் சங்கத்தின் சார்பில் ரெயில் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பூங்காவில், திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் மணிஷ் அகர்வால் மற்றும் முதுநிலை கோட்ட ரெயில்வே இயக்கவியல் மேலாளர் ஹரிகுமார் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். பின்னர் ரெயில் நிலைய வளாகத்தில் கட்டப்பட்டு வரும் ரெயில்வே அலுவலர்களுக்கான குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டனர். அப்போது பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நலச்சங்கத்தின் துணைத்தலைவர் லட்சுமிகாந்தன், பொருளாளர் சுந்தரராஜூலு, துணை செயலாளர் கலியபெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்