மயூர நாட்டியாஞ்சலி விழா தொடக்கம்
மயிலாடுதுறையில் மயூர நாட்டியாஞ்சலி விழா தொடங்கியது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் நாட்டியாஞ்சலி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மாயூரநாதர் கோவிலில் 16-ம் ஆண்டு மயூரநாட்டியாஞ்சலி விழா நேற்று தொடங்கியது. விழாவிற்கு சப்தஸ்வரங்கள் அறக்கட்டளையின் கவுரவத் தலைவர் ஏ.ஆர்.சி.விசுவநாதன் தலைமை தாங்கினார். அறங்காவலர்கள் டாக்டர் செல்வம், சிவலிங்கம், ரவிச்சந்திரன், பாண்டுரங்கன், செந்தில்வேல், ஏ.ஆர்.சி.அசோக், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூம்புகார் எம்.எல்.ஏ., நிவேதா முருகன், பிரிட்டன் தமிழ் பக்தி தலைமை நிர்வாகி லட்சுமிகாந்தன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவில் சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதியும், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை உயர்நிலை ஆலோசனை குழு உறுப்பினருமான முனைவர் மதிவாணன், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம் ஆகியோர் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி மயூர நாட்டியாஞ்சலி விழாவை தொடங்கி வைத்தனர். முதல்நாள் மயூர நாட்டியாஞ்சலி விழாவில் கோவை, சென்னைஉள்ளிட்ட குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலை ஆர்வலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் நடைபெறும் 16-ம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா நேற்று முதல் மார்ச் 1-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெற உள்ளது.இதில் சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பரத கலைஞர்கள் தங்களது நாட்டியத்தின் மூலம் அஞ்சலி செலுத்த உள்ளனர்.