தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாக்கடையில் குவிந்து கிடக்கும் குப்பைகள்
அரியலூர் கைலாசநாதர் கோவில் தெருவில் உள்ள சாக்கடையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்தினர் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், அரியலூர்.
ஏரியின் சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், பேரளி கிராமத்தில் ஒரு ஏரி உள்ளது. இந்த ஏரி கிணறுகள், நிலத்தடி நீர் மட்டம், கால்நடைகள் உள்ளிட்டவைகளுக்கு ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்தநிலையில் ஏரியின் மேற்கு பகுதி மற்றும் வடக்குப்பகுதியின் சுற்றுச்சுவர்கள் இடிந்து விழுந்துள்ளது. எனவே அடுத்த மழை வருவதற்குள் சுற்றுச்சுவர்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், பேரளி, பெரம்பலூர்.
சந்தையை மேம்படுத்த கோரிக்கை
புதுக்கோட்டை சந்தைபேட்டையில் நகராட்சி சந்தை உள்ளது. இதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கடைகள் அமைத்து காய்கறி உள்ளிட்ட வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சந்தையில் வாழைத்தார் மண்டி அருகே குப்பைகள் ஏராளமாக குவிந்து கிடக்கின்றன. அவை கடந்த 2 ஆண்டுகளாக அகற்றப்படாமல் அப்படியே கிடப்பதாக வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் சந்தையில் வியாபாரிகளுக்கு கடைகள் கட்டித்தரவும், அடிப்படை வசதிகள் மேம்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை நகராட்சி சந்தையானது தமிழகத்தில் பெரிய சந்தைகளில் இதுவும் ஒன்றாகும். கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய போதுமான வசதி இல்லாததாலும், சரியாக குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதாலும் பொதுமக்கள் வருகையும் சற்று குறைந்துள்ளது. எனவே புதுக்கோட்டை நகராட்சி சந்தையை மேம்படுத்த அதிகாரிகளும், தற்போது புதிதாக பொறுப்பேற்கும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
பொதுமக்கள், புதுக்கோட்டை.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே வேட்டமங்கலம் ஊராட்சி முத்தனூரில் சாக்கடை கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. அந்த சாக்கடை கழிவுநீர் கால்வாய் முழுமையாக வெட்டப்படாமல் பாதியில் உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள கழிவுநீர் சாக்கடை வழியாக வெளியில் செல்ல முடியாமல் உள்ளது. இதனால் ஆங்காங்கே சாக்கடை கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சாக்கடை கால்வாயை முழுமையாக வெட்டி சாக்கடை கழிவுநீர் வெளியே செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செல்வகுமார், முத்தனூர், கரூர்.