நெல் கொள்முதல் மையம் திறப்பு

நெல் கொள்முதல் மையம் திறப்பு

Update: 2022-02-26 16:46 GMT
நெல் கொள்முதல் மையம் திறப்பு
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை மூலம் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகள் பாசன வசதி பெறுகின்றன. பழைய ஆயக்கட்டு பாசனத்தில் நெல் சொகுபடி செய்யப்படுகிறது. 2-ம் போகத்திற்கு 3700 ஏக்கர் நிலங்கள் கோ-51, ஆடுதுறை 39, ஏ.எஸ்.டி. 16 ஆகிய நெல் சாகுபடி செய்யப்பட்டன. தற்போது வயல்களில் நெல் அறுவடைக்கு தயாராக உள்ளன.

 இதற்கிடையில் ஆனைமலையில் நெல் கொள்முதல் மையம் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று அரசு நெல் கொள்முதல் மையம் தொடங்க உத்தரவிட்டது. இதையடுத்து ஆனைமலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் நேற்று நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் அதிகாரிகள், விவசாயிகள் கலந்துகொண்டனர். 

ஆனால் அறுவடை தொடங்காததால் கொள்முதல் தொடங்கவில்லை. இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் கூறுகையில், விவசாயிகளிடம் இருந்து சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2060-க்கும், பொது ரகம் குவிண்டாலுக்கு 2015-க்கும் கொள்முதல் செய்யப்பட உள்ளது. மையம் திறக்கப்பட்டும் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. நாளை மறுநாள் (நாளை) முதல் கொள்முதல் மையத்திற்கு நெல்லை விவசாயிகள் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றனர். 

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது நெல் நடவு முதல் அறுவடை வரை உரம் விலை உயர்வு, கூலி ஆட்கள் பற்றாக்குறையால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. அப்போது நெல் கொள்முதல் மையத்தில் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ள விலை போதுமானதாக இல்லை. எனவே சன்ன ரகத்திற்கு குவிண்டாலுக்கு ரூ.3500, பொது ரகத்திற்கு ரூ.3400 கூடுதலாக விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்