பறவைகள் இறப்பதை தடுக்க விழிப்புணர்வு
பறவைகள் இறப்பதை தடுக்க விழிப்புணர்வு
பொள்ளாச்சி
தென்மேற்கு, வடகிழக்கு பருவமழையின் மூலம் பரவலாக மழை பெய்ய கூடும். இதனால் அணைகள், ஆறுகள், குளம், குட்டைகள் மற்றும் நீரோடைகள் நிரம்பி காணப்படும். இதனால் பறவைகளும் தண்ணீர் தேடி வெகு தொலைவு சுற்றி திரிய வேண்டிய இருக்காது. தண்ணீர், உணவு கிடைக்கும் இடத்திலேயே தனது இருப்பிடத்தை உருவாக்கி கொள்ளும்.
இதற்கிடையில் தற்போது மழை பொழிவு குறைந்து கடும் வெயில் சுட்டெரிப்பதால் தண்ணீர் மற்றும் பழங்களை அதிகமாக சாப்பிட்டுக் கொள்கிறோம். ஆனால் பறவைகளுக்கு எளிதில் தண்ணீர் கிடைப்பதில்லை. தண்ணீர் தேடி செல்லும் பறவைகள் மயங்கி விழுந்து இறக்கும் பரிதாபம் ஏற்படுகிறது.
இந்த நிலையில் தேசிய பசுமைப்படையினர் மற்றும் கிராம வேளாண் அனுபவ பயிற்சி திட்டத்திற்கு வந்த கோவை வேளாண் கல்லூரி மாணவர்கள் பறவைகள் இறப்பதை தடுக்க பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டி பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வழங்கி வருகின்றனர்.
மனிதர்களுக்கு தண்ணீர் கொடுப்பதற்கு உறவினர்கள், நண்பர்கள் என பலர் உள்ளனர். மேலும் தண்ணீர் இருக்கும் இடத்தை தேடி அலைவதற்கோ அல்லது விலைக்கு வாங்கி கூட தாகம் தணிக்க முடியும். தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் குளம், குட்டைகள் வறண்டு வருகிறது. இதனால் எண்ணற்ற காகம், குருவி, கிளி போன்ற பறவைகள் கோடை வெப்பம் தாங்காமல் தண்ணீர் தேடி அலைந்து கொண்டிருக்கின்றன. தாகத்திற்காக தண்ணீரை தேடி அலையும் பறவைகள் தண்ணீர் கிடைக்காமல் இறக்கும் நிலை ஏற்படுகிறது.
எனவே கிராமங்களில் உள்ள குளம், குட்டைகளில் உயிர் சூழல் அழிக்கப்படாத வகையில் தூர்வாரி நீர் நிலைகளை மேம்படுத்த வேண்டும். வீட்டின் கூரை, மொட்டை மாடியின் மீது சிறு, சிறு குவளைகளில் நிழலான இடத்தில் தண்ணீர் வைத்து பறவைகளின் தாகம் தீர்க்க அனைவரும் முன் வர வேண்டும். இதை வலியுறுத்தி ஆண்டுதோறும் 6 ஆயிரம் துண்டு பிரசுரங்கள் அச்சடித்து பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றோம். மேலும் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.