உணவு, தண்ணீரை தேடி அலையும் வனவிலங்குகள்

முதுமலையில் ஏற்பட்டு உள்ள கடும் வறட்சி காரணமாக வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி அலைந்து வருகின்றன.

Update: 2022-02-26 14:31 GMT
கூடலூர்

முதுமலையில் ஏற்பட்டு உள்ள கடும் வறட்சி காரணமாக வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி அலைந்து வருகின்றன. 

கடும் வறட்சி

கூடலூர், முதுமலை, மசினகுடி பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் பாண்டியாறு, ஓவேலி ஆகிய தடுப்பணைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து குறைந்து விட்டது. மேலும் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் பசுந்தீவனம் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. 

குறிப்பாக புலிகள் காப்பகத்தின் வெளி மண்டல பகுதியான மசினகுடி, சிங்காரா, சீகூர் பகுதியில் வறட்சியின் தாக்கம் அதிகமாக உள்ளது. வழக்கமாக வனப்பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள தரைத்தள சிமெண்டு தொட்டிகளில் வனத்துறையினர் தண்ணீர் ஊற்றுவது வழக்கம். ஆனால் இதுவரை தண்ணீர் ஊற்றும் பணி தொடங்கவில்லை.

பசுந்தீவன தட்டுப்பாடு

இதனால் காட்டுயானைகள், மான்கள் கூட்டமாக தண்ணீரை தேடி அலைவதை காண முடிகிறது. மேலும் பசுந்தீவன தட்டுப்பாடு காரணமாக வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டுயானைகள் அருகே உள்ள கிராமங்களுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வருகிறது. 

இதைத்தடுக்க வனப்பகுதியில் உள்ள சிமெண்டு தொட்டிகளில் போதிய அளவு தண்ணீரை ஊற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- 

தொட்டிகளில் தண்ணீர்...

புலிகள் காப்பகத்தில் வறட்சி காரணமாக சில இடங்களில் உள்ள சிமெண்டு ெதாட்டிகளில் மட்டுமே வனத்துறையினர் தண்ணீர் ஊற்றி வருகிறார்கள். ஆனால் மசினகுடி உள்ளிட்ட வனப்பகுதியில் தண்ணீர் ஊற்றும் பணி தொடங்கவில்லை. 

இதனால் தண்ணீர் தேடி அலையும் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுகிறது. அவைகளுக்கு வனப்பகுதியிலேயே தண்ணீர் கிடைத்தால் வெளியே வராது. எனவே வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் வனத்துறையினர் தண்ணீர் நிரப்ப உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள்  கூறினார்கள்.

மேலும் செய்திகள்