லாரி டிரைவரை தாக்கி செல்போன் பறித்த 3 வாலிபர்கள் கைது
விழுப்புரம் அருகே லாரி டிரைவரை தாக்கி செல்போன் பறித்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனா்.
விழுப்புரம்,
கும்மிடிப்பூண்டியில் இருந்து லாரி ஒன்று, நேற்று முன்தினம் மாலை இரும்புக்கம்பிகளை ஏற்றிக்கொண்டு புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டுக்கு புறப்பட்டது. லாரியை விருதுநகரை சேர்ந்த டிரைவர் கார்த்தி (வயது 30) என்பவர் ஓட்டினார். மதகடிப்பட்டில் உள்ள ஒரு குடோனில் இரும்பு லோடுகளை இறக்கிவிட்டு மீண்டும் கும்மிடிப்பூண்டிக்கு புறப்பட்டார். விழுப்புரம் அருகே கெங்கராம்பாளையம் மதுவிலக்கு சோதனைச்சாவடி அருகே இரவு அங்குள்ள சாலையோரத்தில் லாரியை நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் திடீரென லாரி டிரைவர் கார்த்தியை தாக்கி அவர் வைத்திருந்த செல்போனை பறித்துச்சென்றனர். இதுகுறித்து கார்த்தி, வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் கார்த்தியிடம் செல்போன் பறித்ததாக புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டை அடுத்த கலிதீர்த்தால்குப்பத்தை சேர்ந்த சங்கர் மகன் செல்வமணி (27), ஹரிதாஸ் மகன் சதீஷ் (24), திருபுவனையை சேர்ந்த முருகன் மகன் வெங்கடேசன் (25) ஆகியோரை இன்ஸ்பெக்டர் தீபா, சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.