காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 934 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
போலியோ சொட்டு மருந்து முகாம்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
போலியோ என்னும் இளம்பிள்ளைவாத நோயை முற்றிலும் ஒழித்திட கடந்த 22 ஆண்டுகளாக 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
வருகிற பிப்ரவரி மாதம் 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 721 மையங்களில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 934 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் இந்த போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.
நடமாடும் குழுக்கள்
இந்த முகாமில் பொது சுகாதாரத்துறை பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள் மற்றும் சுய உதவிக்குழுவினர்கள் என மொத்தம் 2,818 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், திருவிழா நடைபெறும் இடங்கள் மற்றும் பொழுது போக்கு பூங்கா போன்ற இடங்களில் தனியாக முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு வரும் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வெளிமாநிலங்களில் இருந்து கட்டுமான பணிக்காக வந்துள்ள பணியாளர்களின் குழந்தைகளின் எண்ணிக்கை தனியாக கணக்கிடப்பட்டு அவர்களுக்கும் 12 சிறப்பு நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் தவறாமல் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி ஏற்கனவே சொட்டு மருந்து வழங்கப்பட்டிருப்பினும், இந்த முறையும 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கி போலியோ என்னும் இளம்பிள்ளைவாத நோயை முற்றிலும் ஒழித்திட போலியோ நோய் நம் நாட்டில் வராமல் காத்திடவும் அனைவரும் ஒத்துழைப்பு நல்கும்படி மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் இணை இயக்குனர் நலப்பணிகள், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் மற்றும் திட்ட அலுவலர் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு நலம் ஆகியோர் கலந்துக்கொண்டு போலியோ சொட்டு மருந்து திட்டம் காஞ்சீபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தபட உள்ளது.