உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் நெல்லை மாணவி உணவின்றி தவிப்பதாக பெற்றோரிடம் உருக்கம்
உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் நெல்லை மாணவி உணவின்றி தவிப்பதாக பெற்றோரிடம் உருக்கம்
நெல்லை:
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து வருகிறது. முக்கிய நகரங்களில் விமானம் மூலம் குண்டுகளை வீசி வருகிறது. இதனால் உக்ரைன் நாட்டில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் மருத்துவ படிப்பிற்காக உக்ரைன் நாட்டில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படித்து வருகின்றனர். அங்கு போர் பதற்றம் நீடித்து வருவதால் மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளதுடன், தங்களது குடும்பத்தை தொடர்புகொண்டு அங்குள்ள நிலை குறித்து பேசி வருகின்றனர். தங்கள் உயிருக்கு ஆபத்தான நிலை இருப்பதாகவும் உருக்கமுடன் கூறி வருகின்றனர்.
இந்தநிலையில் நெல்லை வண்ணார்பேட்டையை சேர்ந்த மணிகண்டன்- உமாசங்கரி தம்பதியின் மகள் தீபஸ்ரீ என்பவர், முதலாம் ஆண்டு மருத்துவ படிப்புக்காக கடந்த 6-ந் தேதி உக்ரைன் சென்றுள்ளார்.
அவர் தனது பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு உருக்கமாக கூறுகையில், “தற்போது கல்லூரிக்கு செல்ல முடியாமல் விடுதியில் தங்கியுள்ளேன். விடுதியில் உணவு இல்லாமல் பிஸ்கெட் உள்ளிட்ட பொருட்களை மட்டுமே சாப்பிட்டு வருகிறேன்” என்றார்.
இதனை கேட்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்களுடைய மகளை மீட்டு பாதுகாப்பாக இந்தியா அழைத்து வர உதவி செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு அவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.