தொடர் குண்டு வீச்சால் பயமாக இருக்கிறது’ சேலத்தை சேர்ந்த 6 மாணவர்கள் உக்ரைன் நாட்டில் தவிப்பு மீட்க பெற்றோர் கோரிக்கை

சேலத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் 6 பேர் உக்ரைன் நாட்டில் தவிப்பதால், அவர்களை மீட்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-02-25 21:23 GMT
சேலம், 
மேட்டூர் மாணவர்
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கோனூர் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன். இவருடைய மனைவி ரேணுகா. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். முதல் மகன் கார்த்திக் (வயது 26) உக்ரைன் நாட்டில் உள்ள சார்ஜியோ என்ற பகுதியில் எம்.எஸ்.மருத்துவம் இறுதியாண்டு படித்து வருகிறார். இ்ந்த நிலையில் ரஷ்யா- உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. ரஷிய படைகள் உக்ரைன் தலைநகர் மற்றும் முக்கியமான நகரங்களை கைப்பற்ற நெருங்கி வருவதாக தகவல் வருவதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. 
இதனால் உக்ரைன் நாட்டில் இருக்கும் கார்த்திக் நாடு திரும்ப முடியாமலும், அச்சத்தில் உள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர். தங்களது மகனை பத்திரமாக மீட்டு தர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதோடு, இதுகுறித்து மேட்டூர் உதவி கலெக்டர் பிரதாப் சிங்கிடம் மகனை மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்ணன், தம்பி
நங்கவள்ளி அருகே வீரக்கல் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவருடைய மனைவி சித்ரா. பழனியப்பன் நங்கவள்ளி பஸ் நிலையத்தில் டீக்கடை நடத்தி வருகிறார். இவர்களுடைய மகன்கள் ஜெயசூர்யா (வயது 23), பிரதீப் (22) ஆகியோர் உக்ரைன் நாட்டில் இவானோ நகரில் உள்ள இவானோ பிராங்கிஸ்க் தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ படித்து வருகின்றனர். இவர்களில் ஜெயசூர்யா இறுதியாண்டும், பிரதீப் 4-ம் ஆண்டு படித்து வருகின்றனர். 
தற்போது உக்ரைன் நாட்டில் போர் பதற்றம் நிலவுவதால் 2 மகன்களை எண்ணி பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து மாணவர்களின் தாய் சித்ரா கூறுகையில், 2 மகன்களிடமும் செல்போனில் பேசி கொண்டு தான் இருக்கிறோம். நாங்கள் பத்திரமாக இருக்கிறோம் என்று அவர்கள் கூறினர். தொடர் குண்டு வீச்சால் பயமாக உள்ளது. மேலும் போர் பதற்றம் உள்ளதால் எங்களது மகன்கள் மற்றும் தமிழக மாணவர்கள் அனைவரையும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்ைக எடுத்து இந்தியாவிற்கு அழைத்து வர வேண்டும் என்றார்.
ஓமலூர் மாணவிகள்
ஓமலூரை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி லட்சுமி. இவர்களது மகள் அனிதா. இவர் உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து வருகிறார். இதேபோல் ஓமலூரை சேர்ந்த பாலாஜி- சுதா தம்பதியின் மகள் இந்துஜா என்பவரும் உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து வருகிறார். இந்த 2 மாணவிகளின் பெற்றோர் நேற்று இரவு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து உக்ரைன் நாட்டில் சிக்கி உணவின்றி தவிக்கும் தங்களது மகள்களை மீட்டு பாதுகாப்பாக சேலத்திற்கு அழைத்து வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் கார்மேகத்திடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர்கள் கூறுகையில், எங்களது மகள்கள் இருவரும் உக்ரைன் நாட்டில் எம்.பி.பி.எஸ். 5-ம் ஆண்டு படித்து வருகிறார்கள். அங்கு போர் நடப்பதால் தொடர் குண்டு வீச்சால் மிகவும் பயமாக இருப்பதாகவும், இதனால் மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
ஆத்தூர் மாணவி
இதேபோல், ஆத்தூரை சேர்ந்த முத்துசாமி மகள் ரித்திகா என்பவர் உக்ரைனில் 4-ம் ஆண்டு மருத்துவம் படித்து வருவதாகவும், எனவே அவரை பத்திரமாக மீட்டுத்தர வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தி கலெக்டர் கார்மேகத்திடம் மனு அளித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த 6 மாணவ, மாணவிகள் உக்ரைன் நாட்டில் சிக்கி தவித்து வருவதால் அவர்களை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்