ஈரோடு மாவட்டத்தில் நாளை நடக்கிறது போலியோ சொட்டு மருந்து முகாம்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
ஈரோடு மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை நடைபெற உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை நடைபெற உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
போலியோ சொட்டு மருந்து
இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
தமிழகத்தில் மக்கள் நலனை முதன்மையாக கொண்டு மக்களை தேடி மருத்துவம் வழங்கிய முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, சுகாதாரத்துறை அமைச்சரின் சீரிய முயற்சியால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் நடைபெற இருக்கும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடகள் மற்றும் பஸ் நிலையங்களில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் மூலமாக வழங்கப்பட உள்ளது.
1,400 மையங்கள்
இந்த முகாமில் 2 லட்சத்து 816 குழந்தைகளுக்கு 1,400 மையங்களில் 5 ஆயிரத்து 533 பணியாளர்களை கொண்டு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி செய்திடவும் 97 அரசுத்துறை வாகனங்கள் முகாமிற்காக பயன்படுத்தப்பட உள்ளது.
எனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் தங்களது இல்லத்தில் உள்ள 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் ஏற்கனவே எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு இருந்தாலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தங்களது பகுதியில் நடக்கும் போலியோ சொட்டு மருந்து முகாம் மையத்தில் கலந்து கொண்டு சொட்டு மருந்து வழங்கி தங்கள் குழந்தைகளின் வாழ்க்கை நலனை பாதுகாத்து கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.