அன்னவாசல்
அன்னவாசல் அருகே உள்ள கோனாகுறிச்சிப்பட்டி பகுதியில் இருந்து மணல் கடத்தி செல்லப்படுவதாக அன்னவாசல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்றை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டபோது அதில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து டிப்பர் லாரி மற்றும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பொக்லைன் எந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், மணல் கடத்தியதாக வெள்ளைச்சாமி, பரமசிவம், அன்புகலைராஜா, கண்ணன் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்புகலைராஜா, கண்ணன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இதேபோல, மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், மண்டையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ஆவூர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நீர்பழனி ஊராட்சி காரப்பட்டு அருகே சென்ற ஒரு டிப்பர் லாரியை போலீசார் நிறுத்தி சோதனையிட்டபோது அதில் அப்பகுதியில் உள்ள காட்டாற்றில் இருந்து மணல் அள்ளி கடத்தி செல்வது தெரிய வந்தது. இதையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் மணல் கடத்திய டிரைவர் களமாவூர் சத்திரம் சங்கிலிமுத்துவை (41) கைது செய்தனர்.