போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு பூட்டு
தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு போலீசார் பூட்டு போட்டனர்.
தஞ்சாவூர்;
தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு போலீசார் பூட்டு போட்டனர்.
புதிய பஸ் நிலையம்
தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை, திருப்பூர், வேளாங்கண்ணி, கும்பகோணம், பட்டுக்கோட்டை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, பேராவூரணி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு வழித்தடத்திற்கும் செல்லக்கூடிய பஸ்கள் நிற்பதற்காக தனியாக இடவசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் பலர் மோட்டார் சைக்கிள்கள், கார்களை பஸ்கள் நிறுத்தக்கூடிய பகுதிகளில் நிறுத்திவிட்டு செல்வதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
போலீசார் கண்காணிப்பு
போலீசார் எவ்வளவு எடுத்து கூறியும் மோட்டார் சைக்கிள்கள், கார்களை போக்குவரத்துக்கு இடையூறு இன்றி பலர் நிறுத்துவதில்லை. இப்படி போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்வதுடன் அந்த வாகனங்களின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்தநிலையில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் உட்ரோ வில்சன் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
வாகனங்களுக்கு பூட்டு
அப்போது போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள், கார்களுக்கு போலீசார் பூட்டு போட்டுவிட்டு போலீஸ் உதவி மையத்திற்கு சென்றுவிட்டனர். பின்னர் வாகனங்களின் உரிமையாளர்கள் வந்து பார்த்தபோது, வாகனங்களுக்கு பூட்டு போடப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து போலீஸ் உதவி மையத்திற்கு அவர்கள் சென்று இனிமேல் இதுபோன்று போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தமாட்டேன் என கூறியதை தொடர்ந்து அவர்களை எச்சரித்ததுடன் வாகனங்களுக்கு போடப்பட்டிருந்த பூட்டுகளையும் கழற்றினர்.
பறிமுதல்
இது குறித்து இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், பிராங்கிளின் உட்ரோ வில்சன் கூறும்போது போக்குவரத்துக்கு இடையூறாக இனிமேல் யாராவது வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படுவதுடன் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். எனவே பொதுமக்கள் தங்களது வாகனங்களை வாகன நிறுத்தும் இடத்திலோ அல்லது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத இடத்திலோ நிறுத்த வேண்டும் என்றனர்.