ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-02-25 20:06 GMT
பெரம்பலூர்:

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்
பெரம்பலூர் போலீஸ் நிலையம் முன்பு நேற்று மாலை ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் திடீரென்று தங்களது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனை கண்ட போலீசார் ஓடிச்சென்று அவர்களை தடுத்து, அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்தவரும், ஆட்டோ டிரைவருமான ராஜசேகர் (வயது 50) மற்றும் அவரது மனைவி, மருமகன், 2 மகள்கள், 2 மகன்கள், பேரன், பேத்தி ஆகியோர் என்பது தெரியவந்தது. ராஜசேகரின் இளைய மகளை, அதே ஊரை சேர்ந்த ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ராஜசேகர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் சுமார் 1½ ஆண்டுகளுக்கு முன்பு புகார் ஒன்றை கொடுத்ததன்பேரில் இரு தரப்பினரையும் போலீசார் நேரில் அழைத்து விசாரித்ததில், அவர்களுக்குள் சமாதானமாகி சென்றுவிட்டனர்.
மிரட்டி வருகிறார்
இந்நிலையில் காதலித்ததாக கூறப்படும் நபரின் நண்பரான அதே ஊரை சேர்ந்த ஒருவர், தனது நண்பரை போலீஸ் நிலையத்துக்கு கூட்டிவந்து அசிங்கப்படுத்தி விட்டீர்கள் என்று கூறி, தங்கள் குடும்பத்தினரை கடந்த 6 மாத காலமாக மிரட்டி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக ராஜசேகர் தனது குடும்பத்தினருடன் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். பெரம்பலூர் போலீஸ் நிலையம் முன்பு ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்