அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பழனி அருகே அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-02-25 17:40 GMT
பழனி : 

பழனி அருகே அ.கலையம்புத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகபுரம், நாயக்கர்தோட்டம், பச்சையாறு உள்ளிட்ட பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக விநாயகபுரம், நாயக்கர்தோட்டம் பகுதிகளில் குடிநீர் வழங்கப்படவில்லை. இதையடுத்து அப்பகுதி மக்கள் குடிநீர் வழங்க கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் அப்பகுதி வார்டு உறுப்பினர் தங்கராஜ் தலைமையில் பொதுமக்கள் அ.கலையம்புத்தூர் ஊராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் தங்கள் பகுதிக்கு குடிநீர், சாலை, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று முற்றுகையிட்டனர். தொடர்ந்து அவர்கள் பழனி-உடுமலை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 

தகவலறிந்த பழனி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகரன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்