திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 23 பேர் உக்ரைனில் சிக்கி தவித்து வருகின்றனர்

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 23 பேர் உக்ரைனில் சிக்கி தவித்து வருகின்றனர்.

Update: 2022-02-25 17:34 GMT
வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 23 பேர் உக்ரைனில் சிக்கி தவித்து வருகின்றனர். 

வந்தவாசி மாணவர்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கெஜலட்சுமி நகர் அப்பாவு முதலி தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் செல்வ மணிகண்டன். உக்ரைனில் உள்ள கார்கீவ் தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வருகிறார். 
ரஷியா-உக்ரைன் இடையே போர் நடப்பதால், உக்ரைனிலிருந்து தங்களை மீட்கக் கோரி செல்வ மணிகண்டன் மற்றும் அவருடன் பயிலும் தமிழக மாணவர்கள் சிலர் வீடியோ பதிவு மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்பு அலுவலர்களின் எண்கள்

தமிழ்நாட்டை சேர்ந்த சுமார் 5000 மாணவர்கள் பெரும்பாலும் தொழில்முறை கல்வி படிப்போர் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் உக்ரைனில் சிக்கி தவிக்கின்றனர்.
 தமிழ்நாட்டில் இருக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் வாயிலாக பல மீட்பு அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இதனை ஒருங்கிணைக்கும் வகையில் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரக ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் மாநில தொடர்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

மேலும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ் தொடர்பு அலுவலராகவும் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் குடும்பத்தினர் உதவிக்கு அருகில் உள்ள தொடர்பு அலுவலர்களை தொடர்பு கொண்டு அவர்களின் விவரத்தை தெரிவிக்கலாம். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ் தொலைபேசி எண்:- 94450 08158,
மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் கட்டணமில்லா தொலைபேசி எண்:- 1070, ஆயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரக ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் :- 94458 69848, 96000 23645, 99402 56444, 044-28515288, புதுடெல்லியில் தமிழ்நாட்டு பொதிகை இல்லம் உக்ரைன் அவசர உதவி மைய வாட்ஸ்அப் எண்:- 92895 16716, மின்னஞ்சல் முகவரி:- ukrainetamils@gmail.com ஆகியவற்றை பயன்படுத்தி தகவல் தெரிவிக்கலாம். 
இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

23 பேர் சிக்கி தவிப்பு

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 23 பேர் தொழில்முறை கல்வி படிப்பது போன்றவற்றிற்காக உக்ரைனில் உள்ளதாக தகவல்கள் வந்து உள்ளது. அவர்களின் விவரங்கள் சென்னைக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டு வருகிறது என்றார்.

மேலும் செய்திகள்