அரிவாள் ஏணி மீது நின்று அருள்வாக்கு கூறிய சாமியாடி
காரைக்குடி வீரமாகாளியம்மன் கோவில் தீ மிதி திருவிழாவை யொட்டி அரிவாள் ஏணி மீது ஏறி நின்று சாமியாடி அருள்வாக்கு கூறினார்.
காரைக்குடி,
காரைக்குடி வீரமாகாளியம்மன் கோவில் தீ மிதி திருவிழாவையொட்டி அரிவாள் ஏணி மீது ஏறி நின்று சாமியாடி அருள்வாக்கு கூறினார்.
தீ மிதி திருவிழா
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்காலைக்கோட்டை பர்மா காலனியில் உள்ளது, சக்தி வீரமாகாளியம்மன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் தீ மிதி உற்சவ விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 11-ந்தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
அன்றைய தினம் வீரமாகாளியம்மனுக்கு பூச்சொரிதலும், மாலையில் கற்பகவிநாயகர் கோவிலில் இருந்து அம்மன் பூ ரதம் புறப்பாடும் நடைபெற்றது. தொடர்ந்து கடந்த 15-ந்தேதி மாலையில் கொடியேற்றி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
அரிவாள் ஏணி மீது நின்று அருள்வாக்கு
முக்கிய விழா நாளான நேற்று முன்தினம் மாலையில் மதுக்குடம் எடுத்தல், முளைப்பாரி ஊர்வலத்துடன் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், இரவு 9.30 மணிக்கு மேல் கோவில் அருகே உள்ள திடலில் 11 அரிவாள்களை கொண்ட ஏணி மீது ஏறி நின்று சாமியாடி அருள்வாக்கு கூறி பக்தர்கள் மீது மலர் தூவும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
நேற்று காலை பால்காவடி எடுத்து வந்து தீ மிதித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து வந்து தீ மிதித்து சாமி தரிசனம் செய்தனர்.
சந்தன காப்பு அலங்காரம்
நாளை பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மண்டகப்படியை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேக நிகழ்ச்சியும் மதியம் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும், பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெறுகிறது. இரவு கிராமிய கலை நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை செக்காலைக் கோட்டை பர்மா காலனி பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்துள்ளனர்.