குடியிருப்புகளை ஆக்கிரமித்துள்ள சீமைகருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
குடியிருப்புகளை ஆக்கிரமித்துள்ள சீமைகருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
குடிமங்கலம், பிப்26-
குடிமங்கலம் அருகே சிந்திலுப்பு கிராமத்தில் குடியிருப்புகளை ஆக்கிரமித்துள்ள சீமைகருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
சீமைக்கருவேல மரம்
குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது அனிக்கடவு ஊராட்சி.. அனிக்கடவு ஊராட்சியில் அணிக்கடவு, ராமச்சந்திராபுரம, சிந்திலுப்பு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. சிந்திலுப்பு கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.கடந்த காலங்களில் வேலிக்காக வளர்க்கப்பட்ட சீமை கருவேலமரங்கள் தற்போது குடியிருப்பு பகுதிகளிலும் அதிக அளவில் காணப்படுகிறது.
சீமை கருவேல மரங்களின் வேர்கள் நிலத்தடி நீரை வெகுவாக உறிஞ்சிவிடுவதால் நிலத்தடி நீரும் பாதிக்கப் படுவதாக கூறப்படுகிறது. மேலும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ள பகுதிகளில் மற்ற மரங்கள் செடி,கொடிகள் வளர்வதில்லை.
அகற்ற கோரிக்கை
குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட சிந்திலுப்பு கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குடியிருப்புகளை சுற்றியுள்ள பல பகுதிகளில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்து காணப்படுகிறது. சிந்திலுப்பு கிராமத்திற்கு முழுமையான சாலை வசதி இல்லாத நிலையில் சாலையை ஒட்டியுள்ள பகுதிகளில் சீமை கருவேல மரங்கள் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.