“பயமாக இருக்கிறது..! எப்போது தாயகம் திரும்புவோம்?”; உக்ரைனில் தவிக்கும் தேனி மாணவர் உருக்கம்
பயமாக இருப்பதாகவும், எப்போது தாயகம் திரும்புவோம் என்றும் எதிர்பார்த்து காத்திருப்பதாக உக்ரைனில் தவிக்கும் தேனி மாணவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
தேனி:
தேனி பங்களாமேடு திட்டச்சாலையை சேர்ந்த சரவணன் மகன் ரோகித்குமார் (வயது 22). இவர் உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் பட்டப்படிப்பு 3-வது ஆண்டு படித்து வருகிறார். உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில் கார்கிவ் நகரை ரஷியா கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் மாணவன் ரோகித்குமாரின் பெற்றோர் நேற்று முன்தினம் தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரனை சந்தித்து தனது மகனை பத்திரமாக மீட்டு தருமாறு கோரிக்கை மனு கொடுத்தனர். பதற்றமான இந்த சூழ்நிலையில் மாணவன் ரோகித் குமார், உக்ரைனில் தான் வசிக்கும் இடத்தில் உள்ள நிலவரம் குறித்து ஒரு வீடியோ பதிவு செய்து தனது பெற்றோருக்கு நேற்று அனுப்பி உள்ளார்.
அதில் ரோகித்குமார் பேசுகையில், “நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். ஆனாலும் பயமாக இருக்கிறது. நேற்று இங்கு தொடர்ந்து குண்டுவெடிப்பு நடந்தது. நாங்கள் பாதுகாப்பான இடத்தில் தான் இருந்தோம். எங்களுக்கு உணவு கொடுத்தார்கள். காலையில் தான் பாதாள அறையில் இருந்து வெளியே வந்தோம். இருந்தாலும் மீண்டும் குண்டு வீச்சு நடந்தால் பாதுகாப்பாக இருக்க ஏற்பாடுகள் செய்து இருக்கிறார்கள். எங்களை எல்லைக்கு கூட்டிச்சென்று எப்போது இந்தியாவுக்கு அழைத்து செல்வார்கள் என்ற விவரம் தெரியவில்லை.
நான் படிக்கும் பல்கலைக்கழகத்தில் மட்டும் 200 தமிழ் மாணவர்கள் இருக்கிறோம். இன்னும் அரசிடம் இருந்து முறையான உத்தரவு வரவில்லை. உத்தரவு வந்தால் எங்களை எப்படி இங்கிருந்து அழைத்துச் செல்வது என்ற விவரத்தை சொல்வதாக கூறி இருக்கிறார்கள். அது மட்டும் எங்களுக்கு வேகமாக கிடைத்தால் நன்றாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.