உணவு, குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் நண்பர்களை மீட்க வேண்டும்; உக்ரைனில் இருந்து திரும்பிய தேனி மாணவர் பேட்டி

போர் நடக்கும் உக்ரைனில் உணவு, குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் நண்பர்களை மீட்க வேண்டும் என்று தமிழகம் திரும்பிய தேனி மாணவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-02-25 15:53 GMT
தேனி:
போர் நடக்கும் உக்ரைனில் உணவு, குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் நண்பர்களை மீட்க வேண்டும் என்று தமிழகம் திரும்பிய தேனி மாணவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 
போர் பதற்றம்
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து, குண்டுவீச்சு மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், உக்ரைனில் படித்து வரும் தமிழக மாணவ-மாணவிகளை பத்திரமாக மீட்டுத்தருமாறு அவர்களின் பெற்றோர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
இந்த போர் பதற்றத்துக்கு நடுவில், உக்ரைனில் மருத்துவம் படித்து வரும் தேனி மாவட்டத்தை சேர்ந்த ஒரு மாணவி, 5 மாணவர்கள் என 6 பேர் உள்பட தமிழகத்தை சேர்ந்த 9 பேர் நேற்று சொந்த ஊருக்கு திரும்பி வந்தனர். அந்த மாணவர்களை, அவர்களின் பெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்றனர். பத்திரமாக திரும்பி வந்த பிள்ளைகளை பெற்றோர்கள் உச்சிமுகர்ந்து பாசமழை பொழிந்தனர். 
தேனி மாணவர்கள்
உக்ரைனில் இருந்து திரும்பி வந்தவர்களில் போடியை சேர்ந்த வெங்கடேஸ்வரன் மகன் தனுஷ்குமாரும் (வயது 20) ஒருவர். உக்ரைன் நிலவரம், திரும்பி வந்த அனுபவம் குறித்து மாணவர் தனுஷ்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
நான் உக்ரைன் கீவ் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். 3-ம் ஆண்டு படித்து வருகிறேன். எனக்கு தந்தை இல்லை. எனது தாய் ரம்யா, போடி கோர்ட்டில் ஊழியராக வேலை பார்க்கிறார். நானும், சக மருத்துவ மாணவர்களான, தேனி மாவட்டம் கோம்பையை சேர்ந்த கோகுல், ஜெய் ஆகாஷ், ஷாரு அஸ்வின், கோபிகிருஷ்ணா, ரெனிடா, கரூரை சேர்ந்த லோகேஸ்வரன், ராமநாதபுரத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, சேலத்தை சேர்ந்த தேவ் ஆகிய 9 பேர் உக்ரைனில் இருந்து திரும்பி வந்தோம். உக்ரைனில் போர் தொடங்குவதற்கு முன்பு, பல்கலைக்கழகத்தில் இருந்து போர் தொடங்க வாய்ப்புகள் குறைவு என்றும், தேவைப்பட்டால் சொந்த நாட்டுக்கு செல்லலாம் அல்லது இங்கேயே இருந்து படிப்பை தொடரலாம் என்றும் தெரிவித்தனர்.
3 விமானங்கள் மாறினோம்
இதனால், பல மாணவ-மாணவிகள் படிப்பு முக்கியம் என்பதால் சொந்த ஊருக்கு திரும்பாமல் கல்லூரிக்கு சென்றனர். போர் தொடங்கிய நாள் வரை வகுப்புகள் நடந்தன. நாங்கள் கடந்த 22-ந்தேதியே உக்ரைனில் உள்ள கார்கிவ் பகுதியில் இருந்து ரெயில் மூலம் லிவிவ் பகுதிக்கு புறப்பட்டோம். அங்கிருந்து துருக்கியில் உள்ள இஸ்தான் புல் விமான நிலையத்துக்கு 23-ந்தேதி சென்றோம். பின்னர் அங்கிருந்து கத்தாரில் உள்ள தோகா விமான நிலையம் வந்து, அங்கிருந்து கோழிக்கோடு விமான நிலையத்துக்கு வந்தோம். 3 விமானங்கள் மாறி கோழிக்கோடு வந்து சேர்ந்தோம். அங்கிருந்து பஸ்சில் சொந்த ஊருக்கு திரும்பி வந்தோம்.
நாங்கள் வந்தது தான் கடைசி விமானம் என்று நினைக்கிறேன். விமானத்தில் வந்து கொண்டு இருக்கும் போது தான் போர் தொடங்கி குண்டு வீசத் தொடங்கிய தகவல் கிடைத்தது. என்னோடு படிக்கும் சக மாணவர்களை தொடர்பு கொண்டேன். அவர்கள் பல்கலைக்கழகங்களில் உள்ள பாதாள அறைகள் மற்றும் மெட்ரோ ரெயிலுக்கான சுரங்க பகுதிகளில் தங்கி இருப்பதாக தெரிவித்தனர்.
உணவு, குடிநீர் தேவை
அங்கு அவர்கள் உணவு, குடிநீர் கிடைக்காமல் தவிக்கின்றனர். உக்ரைனில் தண்ணீரை ஏ.டி.எம். போன்ற எந்திரங்களின் மூலம் தான் பெற முடியும். போர் காரணமாக தண்ணீர், உணவு இன்றி தவிப்பவர்களுக்கு அரசு உடனடியாக உதவிகள் செய்ய வேண்டும். சிலரின் செல்போன் ‘சார்ஜ்’ இல்லாமல் அணைந்துவிட்டது. இதனால், அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. அங்கு மெட்ரோ சுரங்கப்பாதையில் பதுங்கி இருக்கும் மாணவிகள் கழிப்பறை கூட செல்ல முடியாமல் தவிப்பதாக கூறுகிறார்கள். அதைக்கேட்கும் போது ரொம்ப கடினமாக உள்ளது.
உக்ரைனில் உள்ள கார்கிவ் பகுதியில் சுமார் 5 ஆயிரம் இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர். உக்ரைன் முழுவதும் சுமார் 20 ஆயிரம் இந்திய மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களில் சுமார் ஆயிரம் பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் பலரும் சொந்த ஊருக்கு திரும்புவதற்காக விமான டிக்கெட் முன்பதிவு செய்த நிலையில், விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் அவர்களால் சொந்த ஊருக்கு வரமுடியவில்லை. அவர்களை மத்திய, மாநில அரசுகள் பத்திரமாக மீட்டு வர வேண்டும்.
2 பேர் கதி என்ன?
எங்களோடு உக்ரைனில் இருந்து புறப்பட்டு இஸ்தான் புல் விமான நிலையத்துக்கு வந்தவர்களில் 2 பேர் அங்கேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். அங்கு தடுப்பூசி செலுத்திக்கொண்டது தொடர்பான படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் தான் விமானத்தில் பயணம் செய்ய முடியும். அதற்கு தடுப்பூசி சான்றிதழ் எண் போன்ற விவரங்கள் தேவை. அதுபோன்ற விவரங்களை முழுமையாக கொடுக்க இயலாமல் 2 பேர் அங்கு நிறுத்தப்பட்டனர். அவர்கள் நிலை என்ன ஆனது என தெரியவில்லை.
உக்ரைனில் மேற்கு பகுதியில் உள்ள பிராந்தியங்களில் வசிக்கும் இந்தியர்களை முதலில் மீட்க நடவடிக்கை எடுப்பதாக அறிகிறேன். ஆனால், கிழக்கு பகுதியில் உள்ள டொனஸ்க், லுகான்ஸ், கார்கிவ் போன்ற பகுதிகளில் தான் பாதிப்புகள் அதிகம். அங்குள்ள இந்தியர்கள் தான் அதிக அச்சத்தில் உள்ளனர். அவர்களை முதலில் மீட்க வேண்டும்.
இவ்வாறு அவர் உருக்கமாக கூறினார்.

மேலும் செய்திகள்