தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-

Update: 2022-02-25 15:12 GMT

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:- 


போக்குவரத்து பாதிப்பு  

கோவையில் இருந்து கோவைப்புதூர் செல்லும் புட்டுவிக்கி சாலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாதாள சாக்கடைக்காக பள்ளம் தோண்டும் பணிகள் மந்த நிலையில் நடைபெறுகிறது. மேலும் தண்ணீர் குழாயும் உடைந்து ரோடு சேறும் சகதியுமாக மாறி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் ெபரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே புட்டு விக்கி சாலை பணிகளை விரைவில் சீரமைக்க வேண்டும்.
கந்தசாமி, கோவை. 

பராமரிப்பு இல்லாத பூங்கா

கோவை சேரன் மாநகரில் சிறுவர் விளையாட்டு பூங்கா உள்ளது. இந்த பூங்கா தற்போது பராமரிப்பு இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அங்குள்ள பொருட்கள் அனைத்தும் உடைந்து தகர்ந்த நிலையில்தான் காணப்படுகிறது. இதனால் சிறுவர் பூங்காவை பயன்படுத்த முடியாத நிலையில் இந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் உள்ளனர். எனவே  அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பூங்காவை உடனடியாக பராமரிக்க வேண்டும். 
கோபால், சேரன் மாநகர்.

கொசுக்கள் தொல்லை

சுல்தான்பேட்டை பஸ் நிறுத்தம் முன்பு பயணிகள் நிழற்குடை உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பல்லடம், திருப்பூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பல ஊர்களுக்கு செல்ல பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் கொசுக்கடியால் மிகவும் அவதியடைந்து வருகிறார்கள். இதனால் பலருக்கு நோய்கள் பரவும் நிலையும் ஏற்பட்டு உள்ளது. எனவே இங்கு கொசு மருந்து அடித்து கொசுக்களை விரட்ட வேண்டும். 
மணி, சுல்தான்பேட்டை.

துர்நாற்றம் வீசும் கழிவறை

பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள கழிவறை முறையாக சுத்தம் செய்யப்படுவது இல்லை. இதனால் அங்கு பலத்த துர்நாற்றம் வீசுவதால் இங்கு செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அத்துடன் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இங்குள்ள கழிவறையை முறையாக சுத்தம் செய்ய வழிவகை செய்ய வேண்டும். 
கண்ணன், பொள்ளாச்சி

குவிந்து கிடக்கும் குப்பைகள்

அன்னூர் கெம்பநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு பள்ளி அருகே குப்பைகள் அதிகளவில் கொட்டப்பட்டு வருகிறது. காற்று வேகமாக வீசும்போது அந்த குப்பைகள் பறந்து பள்ளிக்குள் வந்து விடுகிறது. அத்துடன் அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளால் அதிகளவில் துர்நாற்றம் வீசுவதால், தொற்றுநோய் பரவும் அபாயமும் நிலவி வருகிறது. எனவே  அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும். 
சந்திரசேகர், கரியாம்பாளையம். 

முன்கூட்டிய வரும் அரசு பஸ்

அன்னூர் அருகே உள்ள கெம்பநாயக்கன்பாளையத்துக்கு 45 என்ற எண் கொண்ட அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் மாலை 4.10 மணிக்கே வந்து விட்டு அங்கிருந்து 2 கி.மீ. தூரம் கொண்ட கரியாம் பாளையம் பிரிவில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் கெம்பநாயக்கன் பாளையத்தில் பள்ளி முடிந்து 4.15 மணிக்கு பின்னர் வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேறு பஸ் வசதி இல்லாததால் 2 கி.மீ. தூரம் நடந்து கரியாம்பாளையம் பிரிவு வந்து பஸ் ஏறி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே 4.10 மணிக்கு வரும் பஸ்சை 4.30 மணிக்கு வரும்படி இயக்கினால் மாணவர்கள் பயன்பெருவார்கள்.
மகேசன், அன்னூர். 

தினத்தந்தி செய்தி எதிரொலி:
குப்பைகள் அகற்றப்பட்டன

கோவையை அடுத்த பாப்பம்பட்டியில் இருந்து இடையர்பாளையம் செல்லும் சாலையில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வந்தனர். இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பயனாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை சுத்தம் செய்து குப்பை போட குப்பை தொட்டியும் வைத்து உள்ளனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்ைக எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
கோபி, பாப்பம்பட்டி. 

வேகத்தடை வேண்டும்
கோவை கணபதி மாநகர் பண்ணாரியம்மன் கோவில் சாலையில் இருந்து காந்திமாநகர் செல்லும் பாதையில் ஒரு தனியார் மருத்துவமனை அருகே 4 வழி சந்திப்பு உள்ளது. இதில் வேகத்தடை இல்லாததால் 4 பாதையிலும் இருந்து வாகனங்கள் வேகமாக வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் பலர் காயத்துடன் தப்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும்.
செந்தில்குமரன், காந்திமாநகர். 

நோயாளிகள் அவதி

கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் ஏராளமானவர்கள் வந்து செல்கிறார்கள். இங்குள்ள சிவப்பு மண்டலம் (ரெட்சோன்) பகுதியில் உள்ள கழிவறை சுத்தம் செய்யப்படுவது இல்லை. அத்துடன் அந்த கழிவறை அருகே உள்ள வார்டில் முறையாக மின்விசிறியும் இயங்குவது இல்லை. இதனால் இங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
குமரன், கோவை.

போக்குவரத்து நெரிசல்

பொள்ளாச்சி மார்க்கெட் சாலையில் ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசலை தடுக்க சாலை அகலப்படுத்தப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் அங்கு சாலை ஓரத்தில் லாரிகளை நிறுத்தி பொருட்கள் ஏற்றி இறக்கப்படுவதால் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்ைக எடுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க வேண்டும்.
சுந்தரேசன், பொள்ளாச்சி. 




மேலும் செய்திகள்