2 பசுமாடுகளை அடித்து கொன்ற புலி

நெலாக்கோட்டை அருகே 2 பசுமாடுகளை புலி அடித்து கொன்றது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.

Update: 2022-02-25 14:56 GMT
பந்தலூர்

நெலாக்கோட்டை அருகே 2 பசுமாடுகளை புலி அடித்து கொன்றது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர். 

பசுமாடுகள் 

மலைமாவட்டமான நீலகிரியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்த விலங்குகள் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்புக்குள் புகுந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பந்தலூர் தாலுகா நெலாக்கோட்டை அருகே உள்ள சூஷம்பாடி பகுதியை சேர்ந்தவர் முகமது. இவர் தனது வீட்டில் பசுமாடு களை வளர்த்து வருகிறார். அந்த மாடுகள் மேய்ச்சலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவது வழக்கம்.  

புலி அடித்து கொன்றது

அதன்படி அவர் வளர்த்து வந்த 2 பசுமாடுகள் நேற்று முன்தினம் காலையில் மேய்ச்சலுக்காக சென்றன. ஆனால் இரவு ஆகியும் அவை வீடு திரும்பவில்லை. இதைத்தொடர்ந்து நேற்று காலையில் முகமது தனது பசுமாடுகளை தேடி சென்றார்.  

அப்போது சூஷம்பாடி அருகே உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் உள்ள சமவெளி பகுதியில் 2 மாடுகளும் கழுத்தில் காயத்துடன் உயிரிழந்தபடி கிடந்தன. அவற்றை புலி அடித்து கொன்றது தெரியவந்தது. 

வனத்துறை விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த பிதிர்காடு வனச்சரக அதிகாரி ராம்குமார், வனவர் ஜார்ஜ் பிரவீன்ஷன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். 

அதில் பசுமாடுகளை அடித்து கொன்றது புலிதான் என்பதை உறுதி செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து வனத்துறையினர் அந்தப்பகுதியில் 4 கண்காணிப்பு ேகமராக்களை பொருத்தி கண்காணித்து வருகிறார்கள். 

இந்தப்பகுதி குடியிருப்பு பகுதிக்கு அருகே இருப்பதால் புலி நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர். 

தீவிர கண்காணிப்பு

இது குறித்து ெபாதுமக்கள் கூறும்போது, உயிரிழந்து உள்ள பசுமாடுகளின் உடலில் இருக்கும் காயங்களை வைத்து பார்க்கும்போது அதை அடித்து கொன்றது புலிதான் என்பது உறுதியாக தெரியவருகிறது. 

எனவே வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு அந்த புலியை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்