சேதமடைந்த ரெகுலேட்டர்கள் சீரமைக்கப்படுமா?
கோட்டூர் பகுதியில் சேதமடைந்த ரெகுலேட்டர்களை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோட்டூர்:
கோட்டூர் பகுதியில் சேதமடைந்த ரெகுலேட்டர்களை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரெகுலேட்டர்கள்
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதியில் பாமணி ஆறு, கோரையாறு, அரிச்சந்திரா நதி, முல்லையாறு, அடப்பாறு, பொண்ணு கொண்டான்ஆறு, சாளூவன் ஆறு, பாண்டியாறு உள்ளிட்ட ஆறுகள் உள்ளன. இந்த ஆறுகள் இந்த பகுதியில் வேளாண்மை சாகுபடிக்கு முக்கியமாக பயன்பட்டு வருகிறது. மேற்கண்ட ஆறுகளில் நூற்றுக்கணக்கான ரெகுலேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்்த ரெகுலேட்டர்கள் சாகுபடி நேரங்களில் தேவையான இடங்களுக்கு தண்ணீரை தேக்கி வைக்கவும், மழை-வெள்ள காலங்களில் திறந்து விட்டு நீரை வடியவிடுவதற்கும் பயன்படுத்தபடுகிறது.
சீரமைத்து தர வேண்டும்
மேலும் ஆறுகளின் கரைகளில் இடையே உள்ள இரு கிராமங்களை இணைப்பதற்கு நடைபாதையாகவும், இருசக்கர வாகனங்கள் சென்று வரக்கூடிய அளவிலும் பயன்பட்டு வருகிறது. இந்த ஆறுகளில் உள்ள ரெகுலேட்டர்கள் கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேலாகி உள்ளது. தற்போது இந்த ரெகுலேட்டர்கள் சேதமடைந்துள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பு கோட்டூர் பகுதியில் சேதமடைந்த ரெகுலேட்டர்களை கண்டறிந்து, சீரமைத்து தர வேண்டும். மேலும் அதற்கு வர்ணம் பூசி பாதுகாக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.
---