திருப்பத்தூரை சேர்ந்த 3 மாணவர்கள் உக்ரைனில் சிக்கி தவிப்பு
திருப்பத்தூரை சேர்ந்த 3 மருத்துவ மாணவர்கள் உக்ரைனில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்டு வரும்படி கலெக்டரிடம், பெற்றோர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூரை சேர்ந்த 3 மருத்துவ மாணவர்கள் உக்ரைனில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்டு வரும்படி கலெக்டரிடம், பெற்றோர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
3 மாணவர்கள் சிக்கி தவிப்பு
திருப்பத்தூர் கோட்டை பகுதியைச் சேர்ந்த முகமது சையத் அஸ்ராரி, அலீம், ஹாசிம்கான் ஆகிய 3 மாணவர்கள் உக்ரைனில் மருத்துவ படிப்பு படித்து வருகின்றனர்.
தற்போது உக்ரைன் மீது, ரஷியா போர்தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனில் மருத்துவம் படித்துவரும் தமிழக மாணவ- மாணவிகள் உக்ரைனில் சிக்கி தவித்துப வருகின்றனர்.
அவர்களை மீட்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருப்பத்தூரை சேர்ந்த முகமது சையத் அஸ்ராரி, அலீம், ஹாசிம்கான் ஆகிய 3 மாணவர்களின் பெற்றோர் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
மீட்டு வரவேண்டும்
எங்களுடைய மகன்கள் நீட் தேர்வில் வெற்றிபெற்று உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து வருகிறார்கள்.
தற்போது அங்கு போர் மூண்டுள்ளதால் அவர்கள் அனைவரும் மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி உள்ளனர். அவர்கள் உணவு உள்ளிட்ட பொருட்கள் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருவதாக போன் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
அங்கு போர் விமானங்கள் வீசும் குண்டுகள் வெடிக்கும் காட்சிகளைப் பார்த்து அதிர்ச்சியில் இருக்கின்றனர். போனில் பேசும்போது கண்ணீர்மல்க எங்களை காப்பாற்றுங்கள் என்று கதறுகின்றனர்.
எனவே மத்திய அரசு உடனடியாக தூதரகத்தின் மூலம் எங்கள் பிள்ளைகளை தமிழ் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் மனுவில் கூறி உள்ளனர்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் மத்திய, மாநில அரசுக்கு தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
மாணவர் பேட்டி
மாணவர் முகமது சையத் அஸ்ராரி சமூக வலைத்தளம் மூலம் தினத்தந்தி நிருபருக்கு அளித்த பேட்டியில் நான் எம்.பி.பி.எஸ். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன்.
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் தங்கி படித்து வருகிறோம். மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 150 மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள்.
தற்போது உக்ரைன் நாட்டில் போர் காரணமாக கடினமான சூழ்நிலை உள்ளது. உணவு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணம் எடுக்க முடியவில்லை.
இந்திய தூதரகத்தை தொடர்புகொண்டு இந்தியா திரும்ப ஏற்பாடு செய்ய கேட்டுள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறுகிறார்கள். உடனடியாக எங்களை இந்தியா அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.