குன்றத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 75 பவுன் நகை கொள்ளை
குன்றத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 75 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
வீட்டின் பூட்டு உடைப்பு
குன்றத்தூர் வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் ரவீந்திர செல்வம் (58). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மகளுக்கு கடந்த 21-ந் தேதி திருமணம் என்பதால் பூந்தமல்லியில் உள்ள திருமண மண்டபத்திற்கு வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டனர்.
அன்றைய தினம் காலை வீட்டில் வேலை செய்து வரும் லோகம்பாள் என்பவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நகை கொள்ளை
இதுகுறித்து ரவீந்திர செல்வத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளை சம்பவம் நடந்த வீட்டில் சோதனை செய்தபோது மகளின் திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த 75 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மகளின் திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருமணம் முடிந்து 3-வது நாளில் மகளுக்கு நகைகளை அணிவித்து அனுப்புவது வழக்கம் என்பதால் நகைகளை வீட்டில் வைத்து சென்றது குறிப்பிடத்தக்கது.