வாலாஜாபாத் தாலுகாவில் ரூ.40 லட்சம் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகாவில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

Update: 2022-02-25 11:48 GMT
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகாவுக்கு உள்பட்ட திம்மராஜாம்பேட்டை ஊராட்சியில் உள்ள சீயமங்கலம் பேட்டை பகுதியில் அரசுக்கு சொந்தமான மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது.

இந்த நிலத்தை பல ஆண்டு காலமாக ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த நிலையில், இந்த இடத்தை பழங்குடி இருளர் இன மக்களுக்கு வீடுகட்ட இடம் ஒதுக்கீடு செய்து பட்டா வழங்க காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகம் உத்தரவின்படி வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.இதனை அறிந்த ஆக்கிரமிப்பாளர்கள் இரவோடு இரவாக சீயமங்கலம் பேட்டை பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் குடிசைகளை அமைத்தனர்.

இது குறித்து காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் வந்தது. அதன்பேரில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவின் படி மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில், வாலாஜாபாத் தாசில்தார் லோகநாதன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சீயமங்கலம் பகுதிக்கு சென்று போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் 15 ஆக்கிரமிப்பு குடிசைகளை அகற்றி, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்பிலான 9 ஏக்கர் 10 சென்ட் அளவிலான இடத்தை மீட்டெடுத்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்