களக்காடு அருகே கடமான் கறியை பதுக்கிய வாலிபர் கைது

கடமான் கறியை பதுக்கிய வாலிபர் கைது செய்து விசாரணை நடத்தினர்

Update: 2022-02-24 21:47 GMT
களக்காடு:
களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பட்டங்காட்டை சேர்ந்தவர் அரிராம் மகன் சங்கரமணி (வயது 30). இவரது வீட்டில் கடமான் கறி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக களக்காடு வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் தலைமையில், வனசரகர் (பொ) கார்த்திகேயன், வனவர் செல்வசிவா, வனக்காப்பாளர்கள் மற்றும் வனத்துறையினர் அவரது வீட்டை சோதனையிட்டனர்.
அப்போது அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த கடமான் கறி பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில், பட்டங்காட்டை சேர்ந்த விவசாயி துரைசிங் தனது விவசாய தோட்டத்தை சுற்றிலும், வனவிலங்குகள் புகாமல் தடுப்பதற்காக சட்டவிரோதமாக மின்சார வேலி அமைத்ததும், அந்த மின்சார வேலியில் சிக்கி கடமான் பலியானதும், சங்கரமணி, அதே ஊரைச் சேர்ந்த சுப்பையா திரவியம் மகன் முருகன் (35), திருவிருத்தான்புள்ளியை சேர்ந்த சாமுவேல் மகன் பொன்ராஜ் ஆகியோர், உயிரிழந்த கடமானை எடுத்து சென்று, வெட்டி கூறு போட்டு பங்கு வைத்ததும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து பொன்ராஜ்க்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சங்கரமணியை வனத்துறையினர் கைது செய்து சேரன்மாதேவி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 
மேலும் தலைமறைவாக உள்ள முருகன், சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த துரைசிங் ஆகியோரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்