வலிமை' திரைப்பட சிறப்பு காட்சி தாமதம்: சேலத்தில் சினிமா தியேட்டர் கண்ணாடிகளை உடைத்த ரசிகர்கள் கேட்டையும் பெயர்த்ததால் பரபரப்பு

வலிமை திரைப்படத்தின் சிறப்பு காட்சி ஒளிபரப்ப தாமதத்தால் சேலத்தில் சினிமா தியேட்டர் கண்ணாடிகளை ரசிகர்கள் உடைத்து, கேட்டை பெயர்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-02-24 20:59 GMT
சேலம், 
வலிமை படம்
கொரோனா தொற்று பரவத்தொடங்கியதால் நடிகர் அஜித்குமார் நடித்த வலிமை திைரப்படம் திரையிடுவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று வலிமை படம் தமிழகம் முழுவதும் சினிமா தியேட்டர்களில் திரையிடப்பட்டது. அதன்படி சேலம் மாவட்டத்தில் பல தியேட்டர்களில் இந்த படம் வெளியானது.
முன்னதாக சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தியேட்டரில் நேற்று காலை ரசிகர்களுக்கு என்று சிறப்பு காட்சி ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலையிலேயே நடிகர் அஜித்குமார் ரசிகர்கள் தியேட்டர் முன்பு குவியத்தொடங்கினர்.
கண்ணாடிகள் உடைப்பு
இந்த நிலையில் சிறப்பு காட்சி ஒளிபரப்பாக சிறிது காலதாமதம் ஆனது. அப்போது திரையரங்கு முன்பு நின்று கொண்டிருந்த ரசிகர்கள் சிலர் வெகு நேரமாக தியேட்டரின் வெளியில் நின்று கொண்டு உள்ளோம். எனவே தியேட்டருக்குள் அனுமதிக்கும்படி கூறினர். ஆனால் தியேட்டரின் கேட்டை ஊழியர்கள் திறக்க மறுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் பலர் தியேட்டரின் கேட்டை பெயர்த்து எடுத்தனர்.
ஒருவரையொருவர் முண்டியடித்துக்கொண்டு தியேட்டருக்குள் புகுந்தனர். பின்னர் அவர்கள் தியேட்டரின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து, நொறுக்கி சேதப்படுத்தினர். இது குறித்து தகவல் அறிந்த பள்ளப்பட்டி போலீசார் தியேட்டருக்கு விரைந்து ரசிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுத்தனர். தொடர்ந்து சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.
இந்த சம்பவத்தால் தியேட்டர் முன்பு சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்