கடன் தொல்லையால் சோக முடிவு; ஒரே குடும்பத்தில் 3 பேர் விஷம் குடித்து தற்கொலை
ஹாசன் டவுனில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தில் 3 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சோகச் சம்பவம் நடந்துள்ளது.
ஹாசன்:
பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்
ஹாசன் டவுன் ஹேமாவதி நகரை சேர்ந்தவர் சத்திய பிரசாத் (வயது 54). இவரது மனைவி அன்னபூர்ணா(வயது 50), மகன் கவுரவ்(21). சத்திய பிரசாத், பேளூருவில் இப்பானி கிராமத்தில் சொந்தமாக பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வந்தார். பெட்ரோல் விற்பனை நிலையத்தில் சத்திய பிரசாத்திற்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெட்ரோல் விற்பனை நிலையத்தை விற்றுவிட்டார். இதையடுத்து வேறு தொழில் செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளார். அதற்கு கூடுதல் பணம் தேவைப்பட்டதால் வங்கி மற்றும் தனக்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் புதிய தொழிலும் அவருக்கு கைக்கொடுக்கவில்லை. இதற்கிடைேய கடன் கொடுத்தவர்கள் வாங்கிய கடனை உடனே தரும்படி சத்திய பிரசாத்தை நச்சரித்துள்ளனர். இதனால் சத்திய பிரசாத், அவரது குடும்பத்தினர் மனமுடைந்து காணப்பட்டுள்ளனர்.
விஷம் குடித்து தற்கொலை
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு சத்திய பிரசாத், அவரது மனைவி அன்னபூர்ணா, மகன் கவுரவ் ஆகிய 3 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளளனர்.
நேற்று அதிகாலையில் வெகுநேரமாகியும் சத்திய பிரசாத்தின் வீட்டின் கதவு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்தனர். இதையடுத்து அவர்கள், சத்திய பிரசாத்தின் வீட்டின் கதவை தட்டிபார்த்தனர்.
ஆனால் கதவு திறக்கப்படாமல் யார் சத்தமும் இல்லாததால் பென்ஷன் டவுன் போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அதில் சத்திய பிரசாத், அவரது மனைவி அன்னபூர்ணா, மகன் கவுரவ் ஆகிய 3 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து 3 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சோகம்
விசாரணையில், கடன் தொல்லையால் 3 பேரும் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து பென்ஷன் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹாசனில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-------------------------