பட்டியல் இன மக்களுக்கு எதன் அடிப்படையில் இலவச வீட்டுமனை வழங்கப்படுகிறது?-மதுரை கலெக்டர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

பட்டியல் இன மக்களுக்கு எதன் அடிப்படையில் இலவச வீட்டுமனை வழங்கப்படுகிறது? என்று மதுரை கலெக்டர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2022-02-24 20:31 GMT
மதுரை, 

மதுரை கொட்டாம்பட்டியை அடுத்த கருங்காலக்குடி கிராமத்தைச் சேர்ந்த விசுவநாதன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எங்கள் கிராமத்தில் உள்ள நிலமற்ற ஆதிதிராவிடர்களுக்கு(பட்டியல் இனத்தவர்) இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி எங்கள் பகுதியில் 200 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் வசதியானவர்களுக்கும் இலவச பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே ஆதிதிராவிட நலத்துறை சார்பில் குழு அமைத்து, தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து, இலவச பட்டா வழங்குவதற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபத்யாய், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் தரப்பு தெரிவிப்பதைப்போல தகுதியில்லாத நபர்களுக்கு தற்போது வரை இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படவில்லை என்றார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நிலமற்ற ஏழை ஆதிதிராவிடர்களுக்கு எதன் அடிப்படையில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட உள்ளது? என்று கேள்வி எழுப்பினர். விசாரணை முடிவில் இது குறித்து மதுரை மாவட்ட கலெக்டர் பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்