பதவி ஏற்பு விழாவுக்காக தயாராகும் ஈரோடு மாநகராட்சி கூட்ட அரங்கம்
புதிய கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழாவுக்காக ஈரோடு மாநகராட்சி கூட்ட அரங்கம் புதுப்பிக்கப்பட்டு தயார் செய்யப்படுகிறது. 6 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் கூட்டம் நடக்கிறது.
புதிய கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழாவுக்காக ஈரோடு மாநகராட்சி கூட்ட அரங்கம் புதுப்பிக்கப்பட்டு தயார் செய்யப்படுகிறது. 6 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் கூட்டம் நடக்கிறது.
மாநகராட்சி கூட்ட அரங்கம்
ஈரோடு மாநகராட்சியில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 60 வார்டுகளுக்கும் புதிய கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் வருகிற மார்ச் 2-ந் தேதி பதவி ஏற்க உள்ளனர். ஈரோடு மாநகராட்சி கடந்த 2011-ம் ஆண்டு முதல் 60 கவுன்சிலர்களுடன் செயல்பட்டு வருகிறது. அப்போது பழைய மாநகராட்சி கட்டிடத்தில் உள்ள கூட்ட அரங்கில்தான் மேயர் பதவி ஏற்பு விழா நடந்தது.
அதன் பின்னர் புதிய மாநகராட்சி கட்டிடம் கட்டப்பட்டது. பிரமாண்ட கூட்ட அரங்குடன் கட்டப்பட்ட இந்த அரங்கில் 2016-ம் ஆண்டுவரை மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. பின்னர் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. இதனால் கூட்ட அரங்குக்கு கவுன்சிலர்கள் வரும் வாய்ப்பு இல்லை. மாநகராட்சி அதிகாரிகள் பயிற்சி தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.
பதவி ஏற்கும் கவுன்சிலர்கள்
இந்தநிலையில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாநகராட்சியில் வாக்குப்பதிவு சுமுகமாக முடிந்து தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. தி.மு.க. கூட்டணி 48 வார்டுகளை கைப்பற்றி உள்ளது. அ.தி.மு.க., சுயேச்சை வேட்பாளர்கள் தலா 6 பேர் என 12 பேர் வெற்றி பெற்று உள்ளனர்.
இந்த 60 கவுன்சிலர்களும் வருகிற மார்ச் 2-ந் தேதி ஈரோடு மாநகராட்சி கூட்ட அரங்கில் பதவி ஏற்க உள்ளனர். புதிய கூட்ட அரங்கில் பதவி ஏற்பு விழா காணும் முதல் 60 கவுன்சிலர்கள் என்ற பெருமையை இவர்கள் பெறுகிறார்கள்.
இதுபோல் புதிய கூட்ட அரங்கில்தான் புதிதாக தேர்ந்து எடுக்கப்பட உள்ள ஈரோடு மாநகராட்சி புதிய பெண் மேயர், புதிய துணை மேயர், புதிய மண்டல தலைவர்கள் பதவி ஏற்க உள்ளனர்.
எதிர்பார்ப்பு
6 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முதலாக கவுன்சிலர்கள் கூட்டமும் இந்த கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதற்காக கூட்ட அரங்கு புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்படுகிறது. இதற்கான பணிகள் நேற்று தொடங்கின. கூட்ட அரங்கில் இருக்கைகள் தயார் செய்வது, வண்ணம் தீட்டுதல், ஒலிவாங்கிகள் (மைக்) சரி செய்தல், ஒலிபெருக்கிகள் சரி செய்தல் என அனைத்து பணிகளும் நடைபெற்று வருகின்றன.
ஈரோடு மாநகராட்சியில் புதுமுகங்கள் அதிக அளவில் பங்கெடுக்கும் மன்றமாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல் 50 சதவீதத்துக்கும் அதிகமாக, அதாவது 32 பேர் பெண் கவுன்சிலர்களாக உள்ளனர். இவர்களில் ஒருவர் மேயராக பதவி ஏற்க உள்ளார். புதுமுகங்கள், அதிக பெண்கள் என்று அடுத்து வரும் ஈரோடு மாநகராட்சி மாமன்றத்தில் மாநகரின் வளர்ச்சிக்காக பல புதிய திட்டங்கள் நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.