புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வெற்றி
மின்னணு எந்திரம் பழுதானதால் மறுவாக்குப்பதிவு நடந்த புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார். மேலும் அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் உள்பட 4 பேரும் டெபாசிட் இழந்தனர்.
புவனகிரி,
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி ஒரே கட்டமாக நடத்தப்பட்டது. தொடர்ந்து கடந்த 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
அப்போது வாக்கு எண்ணிக்கையின்போது கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டு வாக்குச்சாவடி எண் 4-ல் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரம் திடீரென பழுதானது. இதையடுத்து மறுவாக்குப்பதிவு நடத்த தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
மறுவாக்குப்பதிவு
அதன்படி புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டுக்கான திருவள்ளுவர் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
இதையொட்டி வாக்காளர்கள் அனைவரும் காலையிலேயே ஆர்வமுடன் வாக்குச்சாவடி மையத்திற்கு திரண்டு வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். அப்போது மாவட்ட தேர்தல் பார்வையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் ஆகியோர் வாக்குப்பதிவு நடைபெறுவதை பார்வையிட்டனர்.
இதில் மாலை 5 மணி வரை பொதுமக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஒரு மணி நேரம் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. ஆனால் அந்த வார்டில் கொரோனா நோயாளிகள் யாரும் இல்லாததால், கடைசி ஒரு மணி நேரத்தில் யாரும் வாக்களிக்கவில்லை.
1,170 வாக்காளர்களை கொண்ட இந்த வார்டில் 814 பேர் வாக்களித்தனர். ஆனால் கடந்த 19-ந் தேதி நடந்த தேர்தலில் 927 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர்.
வி.சி.க. வெற்றி
பின்னர் வாக்குப்பதிவு நடந்த அதே வாக்குச்சாவடி மையத்திலேயே இரவு 7 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்ட லலிதா 622 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 5 பேர் போட்டியிட்டனர். இதில் வி.சி.க. வேட்பாளரை தவிர அ.தி.மு.க., பா.ம.க. மற்றும் 2 சுயேச்சை வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
மற்ற வார்டுகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் தி.மு.க. 8 இடங்களிலும், அ.தி.மு.க.- 4, காங்கிரஸ் -3, சுயேச்சை 2 இடங்களிலும் வெற்றி பெற்றது. தற்போது மறுவாக்குப்பதிவில் தி.மு.க. கூட்டணி கட்சி வெற்றிது. இதன் மூலம் தி.மு.க. கூட்டணி புவனிகிரி பேரூராட்சியை கைப்பற்றியது.