குழித்துறை நகராட்சியில் தலைவர் பதவி தி.மு.க.வுக்கா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கா? தொடர்கிறது பேச்சுவார்த்தை
குழித்துறை நகராட்சியில் தலைவர் பதவி தி.மு.க.வை சேர்ந்தவருக்கா? அல்லது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவருக்கா? என்பது குறித்து தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.
குழித்துறை,
குழித்துறை நகராட்சியில் தலைவர் பதவி தி.மு.க.வை சேர்ந்தவருக்கா? அல்லது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவருக்கா? என்பது குறித்து தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.
தி.மு.க. கூட்டணி வெற்றி
குழித்துறை நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. கடந்த 19-ந் தேதி நடந்த தேர்தலில் 21 வார்டுகளிலும் 83 பேர் போட்டியிட்டனர். தமிழ்நாடு அளவில் தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால் குழித்துறை நகராட்சியில் தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன. பா.ஜ.க., அ.தி.மு.க.வும் களத்தில் இருந்தது.
தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பா.ஜனதா ஆகிய கட்சிகள் தலா 5 இடங்களைப் பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சி 4 இடங்களை பிடித்துள்ளது. பா.ம.க. ஒரு இடத்திலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வென்றுள்ளது. இதனால் அங்கு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
அதே சமயத்தில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி என்று முடிவெடுத்தால் தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளின் வார்டு வெற்றிகளை கணக்கிடும் போது குழித்துறை நகராட்சியை கைப்பற்றும் வகையில் பெரும்பான்மை கிடைத்து விடும்.
தலைவர் பதவி யாருக்கு?
அதாவது 21 உறுப்பினர்களை கொண்ட குழித்துறை நகராட்சியில் தி.மு.க. கூட்டணி என்று பார்க்கும் போது 14 இடங்கள் ஆகிறது. அதே சமயத்தில் தி.மு.க. கூட்டணியில் உடன்பாடு ஏற்படுவதில் பல்வேறு சிக்கலும் உள்ளது.
தேர்தலின் போது காங்கிரசுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் அவர்களுக்கிடையே மனக்கசப்பு இன்னும் நீடிக்கிறது. இதனால் தலைவர் பதவிக்கு தி.மு.க.வை சேர்ந்த ஒருவரை நிறுத்தினால் பிரச்சினையின்றி முடிவுக்கு வரும் என கூட்டணி கட்சியினர் பேசிக் கொள்கின்றனர்.
ஏற்கனவே குழித்துறை நகராட்சி தி.மு.க. வசம் இருந்தது. இந்தநிலையில் மீண்டும் அந்த கட்சியே தலைவர் பதவிக்கு வருவதற்கு அதிகம் வாய்ப்பு உள்ளதாக பேசப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை கூட்டணி கட்சிகளிடையே தீவிரமாக நடந்து வருகிறது.
தீவிர ஆலோசனை
இதற்கிடையே மாவட்ட அளவில் குறிப்பாக தி.மு.க.வை பொறுத்தவரையில் அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
மேலும் குமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் கூட்டணி கட்சிகளுக்கிடையே பிரச்சினையை சுமூகமாக தீர்க்கவும் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது.