திருவட்டாரில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி ரத்து: பெண்கள் ‘திடீர்’ சாலை மறியல்
திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் பெண்கள் திடீரென சாைல மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.
திருவட்டார்,
திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் பெண்கள் திடீரென சாைல மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.
தாலிக்கு தங்கம் திட்டம்
தமிழக அரசின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு ஏழைப்பெண்கள் திருமண நிதி உதவி திட்டம் மூலம் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு தாலிக்கு 8 கிராம் தங்கமும், ரூ.50 ஆயிரமும் வழங்கப்படுகிறது. அதற்கு கீழ் கல்வித்தகுதி உள்ள பெண்களுக்கு 8 கிராம் தங்கமும், ரூ.25 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 10 ஊராட்சிகள் மற்றும் 6 பேரூராட்சிகளில் இந்த திட்டத்தில் விண்ணப்பித்த பெண்களுக்கு நேற்று காலை 10 மணியளவில் ஒன்றிய அலுவலகத்தில் வைத்து தாலிக்குத் தங்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக கடந்த 2 நாட்களாக ஒன்றிய அலுவலகத்துக்கு பயனாளிகள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ரத்து
இதையடுத்து நேற்று காலையில் சுமார் 300 பயனாளிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் திரண்டனர். இதற்கிடையே தங்கம் பெறுவற்காக ஊழியர்கள் சிலர் ஜீப்பில் திருவட்டாரில் இருந்து நாகர்கோவிலில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய தங்கம் வரவில்லை என்பதால் நிகழ்ச்சியை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.
இந்த தகவலை அறிந்ததும் அங்கு கூடியிருந்த பெண்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். தொடர்ந்து அவர்கள் தலைவர் ஜெகநாதனிடம் முறையிட்டு வாக்குவாதம் செய்தனர். அப்போது அதிகாரி ஒருவர் டோக்கன் வழங்குவதற்காக ரூ.500 முதல் ரூ.3 ஆயிரம் வரை பெற்றுக்கொண்டதாக புகார் கூறினர். ஊராட்சி கவுன்சிலர் அனிதாகுமாரி வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ‘வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும்’ என்றார்.
சாலை மறியல்
இதையடுத்து ஜெகநாதன் அலுவலரை அழைத்து விசாரித்து, பணத்தை திருப்பி அளிக்க ஏற்பாடு செய்தார்.
தொடர்ந்து, அங்கு கூடியிருந்த பெண்கள் தங்கம் பெறாமல் திரும்ப செல்லமாட்டோம் என்று கூறி கோஷம் எழுப்பியவாறு, ஊராட்சி ஒன்றிய அலுவலம் முன்பு குலசேகரம் - மார்த்தாண்டம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த குலசேகரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், திருவட்டார் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்கப்பெருமாள் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பெண்களை சமரசம் நடத்தினர்.
ெதாடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் கீதா முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது அலுவலர் கீதா கூறும்போது ‘நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட விஷயம் தற்போது தான் எங்களுக்கு தெரியும். இனிமேல் இவ்வாறு நடக்காமல் சரியான தகவல் பெற்று தங்கம் எந்த தேதியில் வழங்கப்படும் என்பதை அறிவிக்கிறோம்’ என உத்தரவாதம் அளித்தார். இதையடுத்து பெண்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் காரணமாக திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.