உடுமலை மூணாறு சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம்
உடுமலை-மூணாறு சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அவற்றை தொந்தரவு செய்யக்கூடாதென வனத்துறையினர் எச்சரிக்கை.
தளி
உடுமலை-மூணாறு சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அவற்றை தொந்தரவு செய்யக்கூடாதென வனத்துறையினர் எச்சரிக்கை.
பருவமழை
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்குள்ள உடுமலை, அமராவதி உள்ளிட்ட வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை, கரடி, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அவற்றிற்கு தேவையான உணவு தேவையை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளும் தண்ணீர் தேவையை அடர்ந்த வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளும் பூர்த்தி செய்து தருகின்றன. இதனால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகம் நம்பி உள்ளது.
இந்த சூழலில் கடந்த ஜூலை மாதம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தென்மேற்கு பருவமழையும் தீவிரம் அடைந்தது. இதன் காரணமாக வனப்பகுதியில் காய்ந்திருந்த மரங்கள் மற்றும் செடிகள் துளிர்விட்டு பசுமைக்கு திரும்பியது. இதனால் வனவிலங்குகளுக்கான உணவுத்தேவை பூர்த்தி அடைந்தது. அதைத்தொடர்ந்து வடகிழக்கு பருவமழையும் வனப்பகுதியில் தீவிரமடைந்தது.
வனவிலங்குகள் முகாம்
இதனால் அங்கு உற்பத்தியாகின்ற ஆறுகளில் நீர் வரத்து ஏற்பட்டது. இதன் காரணமாக வன விலங்குகளுக்கான தண்ணீர் மற்றும் உணவுத் தேவை முற்றிலுமாக பூர்த்தியாகும் சூழல் உருவானது. மேலும் அடிவார பகுதியில் முகாமிட்டுள்ள யானை, கடமான், காட்டெருமை உள்ளிட்டவை வனப்பகுதிக்கு திரும்பிச் சென்றது. இந்த நிலையில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வன விலங்குகளுக்கான உணவு தண்ணீர் தேவையை பூர்த்தி அடைவதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் மீண்டும் அடிவாரப்பகுதிக்கு திரும்பி வந்துவிட்டதாக தெரிகிறது. அமராவதி அணையிலும் நீர் இருப்பு 60 அடிக்குமேல் நீடித்து வருவதால் அணைப் பகுதிக்குள் வனவிலங்குகள் முகாமிட்டு வருகின்றன.
யானைகள் நடமாட்டம்
மேலும் காலை நேரத்தில் உடுமலை - மூணாறு சாலையை யானைகள் கடந்து வனப்பகுதிக்குள் செல்வதும் மாலையில் அணைப்பகுதிக்கு வருவதுமாக உள்ளது. அப்போது ஒரு சில வாகன ஓட்டிகள் அதிக சத்தத்தை எழுப்பி யானைகளுக்கு தொந்தரவு கொடுப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக யானைகள் மிரட்சி அடைந்து வாகன ஓட்டிகளை துரத்திச் சென்ற சம்பவமும் நிகழ்ந்து உள்ளது.
இதனால் உடுமலை மூணாறு சாலையில் யானைகள் நடமாட்டம் இருந்தால் அவை சாலையை கடக்கும் வரையிலும் வாகன ஓட்டிகள் அமைதியாக இருந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும். யானைகள் மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்புவதோ, அவற்றின் மீது கற்களை வீசுவதோ, செல்பி, புகைப்படம் எடுப்பதற்கோ முயற்சி செய்யக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.