சீர்காழி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கொடியேற்றம்
மகா சிவராத்திரியை முன்னிட்டு சீர்காழி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கொடியேற்றம் நடந்தது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகில் ராஜராஜேஸ்வரி என்கிற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு மயான சூறை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி நேற்று கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள், சீர்காழி சட்டைநாதர்கோவிலில் இருந்து அலகு காவடி, பறவைக்காவடி, மேளதாளங்கள் முழங்க கரகத்துடன் பழைய பஸ் நிலையம், கடைவீதி, கச்சேரி சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து வருகிற 1-ந்தேதி இரவு மகா சிவராத்திரியை முன்னிட்டு மயான சூறை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.