வேலூர் மருத்துவ மாணவி உக்ரைனில் சிக்கி தவிப்பு
குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்கிறது என்றும், இந்திய அரசு மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உக்ரைனில் சிக்கிய வேலூர் மருத்துவ மாணவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வேலூர்
குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்கிறது என்றும், இந்திய அரசு மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உக்ரைனில் சிக்கிய வேலூர் மருத்துவ மாணவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குண்டுமழை
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து உக்ரைன் மீது குண்டு மழை பொழிந்து வருகிறது. இந்தியவர்கள் பலர் உக்ரைன்நாட்டில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்த ஜெய்சங்கர்- பொற்செல்வி தம்பதியின் மூத்த மகள் தீபா (வயது 21), உக்ரைன் நாட்டில் உள்ள போல்டாவா என்ற பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தில் 4-ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். அவரும் அங்கு சிக்கியுள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் நேற்று அவரது தந்தையின் உதவியுடன் வேலூர் தினத்தந்தி நிருபர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மாணவி கூறியதாவது:-
அச்சத்தில் உறைந்துள்ளோம்
என்னுடன் இந்தியாவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போல்டாவா பல்கலைக்கழகத்தில் படிக்கின்றனர். தமிழகத்தில் இருந்து மட்டும் 20-க்கும் மேற்பட்டவர்கள் படிக்கின்றனர். நாங்கள் குண்டு வெடிப்பு சத்தங்களை அடிக்கடி கேட்கிறோம். வானில் பல விமானங்கள் பறக்கிறது. நாங்கள் இருக்கும் பகுதி தற்போது பாதுகாப்பாக உள்ளது. ஆனால் பிற பகுதிகளில் குண்டுகள் போடப்படுகிறது. எங்கள் பகுதியிலும் குண்டுகள் போட வாய்ப்புள்ளதாக இங்குள்ளவர்கள் கூறுகின்றனர். உள்ளூர் வாசிகள் அனைவரும் உடைமைகளுடன் வேறு இடத்துக்கு செல்கின்றனர். நான் எங்கு செல்வது என்று தெரியவில்லை.்
எங்கள் பகுதியில் மட்டும் தற்போது தொலைதொடர்பு சாதனங்கள் செயல்பாட்டில் உள்ளது. எங்கள் நகருக்கு அருகில் உள்ள சுமி, டினிப்ரோ, கார்கிவ் ஆகிய பகுதிகள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. போல்டாவாவையும் தாக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. நான் இந்திய அரசுக்கு இ-மெயில் அனுப்பி உள்ளேன். அவர்களிடத்தில் இருந்து பாதுகாப்பாக இருங்கள் என்று தகவல் வந்துள்ளது. ஆனால் மீட்பு குறித்து அவர்கள் தகவல் தெரிவிக்கவில்லை. அருகில் உள்ள விமான நிலையங்களிலும் தாக்குதல் நடந்துள்ளது. சில விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் அச்சத்தில் உறைந்துள்ளோம்.
கடைகளில் பொருட்களை மக்கள் அதிகமாக வாங்கி இருப்பு வைக்கின்றனர். இதனால் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. பொருட்களும் காலியாகிவிட்டது. நாங்கள் அனைவரும் மிகவும் அச்சத்தில் உறைந்துள்ளோம். எங்களை மீட்க இந்திய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கூறினார்.
மீட்க வேண்டும்
தீபாவின் தந்தை ஜெய்சங்கர் கூறுகையில், எனது மகள் அங்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் உள்ளார். அவரை மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற 26-ந் தேதி அவர் தமிழகம் வர இருந்தார். இந்தநிலையில் அவர் அங்கு சிக்கிக்கொண்டார். அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அவரை போன்று பல இந்தியவர்களும் அங்கு மாட்டிக்கொண்டுள்ளனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.