அரிவாளால் வெட்டப்பட்ட தாய் சாவு

மன்னார்குடியில் சொத்து தகராறில் அரிவாளால் வெட்டப்பட்ட தாய் பரிதாபமாக இறந்தார். தந்தைக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2022-02-24 17:01 GMT
மன்னார்குடி:
மன்னார்குடியில் சொத்து தகராறில் அரிவாளால் வெட்டப்பட்ட தாய் பரிதாபமாக இறந்தார். தந்தைக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
சொத்தில் பங்கு கேட்டு தகராறு
தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்த ராஜகோபாலபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது64). இவரது மனைவி பாப்பா (58). இவர்களுக்கு  ராஜ்கண்ணன் (43), இளையராஜா (40), இளவரசு (37) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். 3 ேபருக்கும்  திருமணம் ஆகிவிட்டது. பாலகிருஷ்ணனும், பாப்பாவும் தனது இளைய மகன் இளவரசு வீட்டில் இருந்து வந்தனர். 
இந்தநிலையில் மூத்த மகன் ராஜ்கண்ணன், இரண்டாவது மகன் இளையராஜா ஆகியோர் சொத்தில் பங்கு கேட்டு தாய்-தந்தையிடம் தகராறு செய்து வந்தனர். இதுகுறித்து பாப்பா கடந்த 22-ந்தேதி தலையாமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். 
போலீசில் புகார்
அதில், ராஜ்கண்ணன், இளையராஜா ஆகியோர் சொத்து கேட்டு தன்னையும், தனது கணவரையும் மிரட்டி தகராறு செய்வதாக கூறியிருந்தார். இதுகுறித்து தலையாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்கண்ணனை கைது செய்தனர். மேலும் இளையராஜாவை தேடிவந்தனர். 
இந்தநிலையில் நேற்று மாலை இளையராஜா, தனது தம்பி இளவரசு வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கு இருந்த தாய்-தந்தையிடம் ஏன் போலீசில் புகார் கொடுத்தீர்கள் என கூறி இ்ளையராஜா தகராறு செய்துள்ளார். 
அரிவாள் வெட்டு 
மேலும் சொத்தில் பங்கு கேட்டு தகராறு செய்த இளையராஜா தான் மறைத்து  வைத்திருந்த அரிவாளால் பாலகிருஷ்ணன், பாப்பா ஆகியோரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 
இதில் படுகாயமடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவரும் திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாப்பா பரிதாபமாக இறந்தார். பாலகிருஷ்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதுகுறித்து தலையாமங்கலம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை தேடி வருகின்றனர். சொத்து தகராறில் அரிவாளால் தாயை வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 
----

மேலும் செய்திகள்