பழனிசெட்டிபட்டி இன்ஸ்பெக்டரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

மோட்டார் சைக்கிள் திருடிய நபரின் நகைச்சுவையான வாக்குமூலத்தை வீடியோ எடுத்துவிட்டு அவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுப்பி வைத்தார். இது தொடர்பாக இன்ஸ்பெக்டரிடம் விளக்கம் கேட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே நோட்டீஸ் அனுப்பினார்.

Update: 2022-02-24 15:58 GMT
தேனி: 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ரெங்கசாமிபட்டியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 31). சில நாட்களுக்கு முன்பு இவர், பழனிசெட்டிபட்டியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்து திருட முயன்றார். வீட்டில் இருந்தவர்கள் அவரை பிடித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.போலீசார் அவரிடம் விசாரித்தபோது, பழனிசெட்டிபட்டியில் சில நாட்களுக்கு முன்பு பால் வியாபாரி ஒருவரின் மோட்டார் சைக்கிளை பால் கேனுடன் திருடிச் சென்றது அவர் தான் என தெரியவந்தது. அவரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனகலா மேலும் விசாரணை நடத்தினார். 

அப்போது ராதாகிருஷ்ணன், தூய தமிழில் கவிதை நடையிலும், ஆங்கிலத்திலும் நகைச்சுவையாக வாக்குமூலம் அளித்தார். மேலும் விசாரணையில் அவர் போதைக்கு அடிமையாகி, ஒரு மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் என்றும், சாவியுடன் யாராவது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்து இருந்தால் அதை திருடி ஓட்டுவதும், பெட்ரோல் தீர்ந்து போனாலோ, பழுதாகி விட்டாலோ எங்காவது நிறுத்திவிட்டு சென்று விடுவதாக கூறினார். பின்னர் அவரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், இந்த வாக்குமூலத்தை போலீஸ் அதிகாரி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். அந்த வீடியோ, வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியது. ஒருபுறம் இந்த வீடியோ பார்ப்பவர்களை சிரிக்க வைத்தாலும், மற்றொரு புறம் போலீசார் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து ராதாகிருஷ்ணனிடம் விசாரணை நடத்திவிட்டு அவரை அனுப்பி வைத்த பழனிசெட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனகலாவிடம் விளக்கம் கேட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே நோட்டீஸ் அனுப்பினார். மேலும், இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார். இந்த விவகாரம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்